அரசில் உயர் பதவிகளை வகிப்பவர்களே எனது கணவரைக் கடத்தினர்! – சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜனவரி 24ஆம் திகதி முதல் காணாமற்போன லங்கா ஈ நியூஸ் இணைய பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை, சிறிலங்கா அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களே கடத்தியிருக்கலாம் அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்:

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 24ஆம் திகதி முதல் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பின், காணாமல் போன பிரகீத் எக்னலிகொடவை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஊடகவியலார்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுவரை அவர் தொடர்பான செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களே தனது கணவரைக் கடத்தியிருக்கலாம் என சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளளார்.

பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை குறித்துத் தொடர்ந்தும் தாம் விசாரணைகளைத் மேற்கொண்டு வருவதாகப் சிறிலங்காப் பொலிசாரின் குரல்தரவல்ல அதிகாரி பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சிறந்த சித்திரக் கலைஞரான பிரகீத் எக்னலிகொட தான் வரைந்த கேலிச் சித்திரங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்றை இவ்வருடம் நடாத்த ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசால் உயிராபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டளர்களின் பெயர் பட்டியல் ஒன்று அண்மையில் வெளியாகியிருப்பதாகவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று ஊடகவியலாளர்களுக்கான அமைப்பை, Committee to Protect Journalists (CPJ) சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்த சிறிலங்காவின் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் நாடுதிரும்ப விரும்பினால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.