வன்னி மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தென்னிலங்ககைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன – சுரேஸ் பிறேமசந்திரன்
-
இவ் விடயம் 12. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 12:02க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வன்னி மக்களின் பொருட்கள் சூறையாடப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. ஆனால் மீளக்குடியேற்ற மக்கள் குடியிருக்க இடம் இன்றி விடப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்களை தமது பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்காவின் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு மக்கள் குடியமர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்ட போதிலும் பல்வேறு காரணங்களைக் காட்டி அம் மக்கள் குடியமர அனுமதிக்கப்படவில்லை.
போர் முடிந்துவிட்டதாக சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றது. அவ்வாறாயின் இன்னமும் மக்கள் சுதந்திரமான நடமாட்டம் ஏன் தடுக்கப்படுகின்றது. முட்கம்பி வேலிகளும், மக்களுக்கான தடைகளும் தொடர்வதற்கு எந்தவித அடிப்படைத் தேவைகளும் இல்லை.
கடந்த ஆண்டு வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள்ளே அடைக்கப்பட்டார்கள். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் படிப்படியாக மீள் குடியமர்வு என்ற பெயரில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் அங்கு அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குந்தியிருக்க இடம் இல்லை. விவசாயம், மீன்பிடி போன்ற தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அந்த மக்களுக்குச் சொந்தமான பொருட்கள் சொத்துக்கள் எல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன. பொருட்கள் தொடர்பில் கேட்ட பொழுது அனைத்தும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. உண்மையில் அனைத்துப் பொருட்களும் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
உழவியந்திரங்கள் முதல் மிதிவண்டிகள் மற்றும் தங்க நகைகள் என மக்களுக்குச் சொந்தமான நூற்றாண்டு காலமாக மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்த கோடிக்கணக்காண சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அந்த மக்கள் சொந்தக் காலில் நின்று தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு எந்தவித உதவியினையும் சிறீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை.
ஆனால் தற்போதைய தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விகிதாசார்தைக் குறைப்பதற்கென நூற்றுக்கணக்கான சுயேட்சைக் குழுக்களை தேர்தலில் இறக்கியுள்ளது. ஒவ்வொரு குழுக்களுக்கும் கோடிக்கணக்கான பணத்தினை அரசாங்கம் செலவிடுகின்றது.
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக எத்தனை ஆயிரம் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. அந்த உயிர்கள் ஒவ்வொன்றினதும் கனவுகள் வீண்போகாது.
சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனநாயக ரீதியாக உழைப்போம்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்துள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி எமது மக்களுக்கான தீர்வினை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும், என்று தெரிவித்தார்.