தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது – சோமவன்ச

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட உள்நாட்டில் காணப்பட்ட ஏனைய ஜனநாயகப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதனால், பாரியளவிலான சர்வதேசத்தின் உதவிகளை இழந்துள்ளதுடன் அநாவசியமான பகையையும், தலையீடுகளையும் தேடிக்கொண்டுள்ளது. என ஜே. வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது. பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி, நாட்டு மக்களை மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிடவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இதனை பொது மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச நாடுகளின் செயற்பாடுகள் குறித்து நேற்று வியாழக்கிழமை தெளிவு படுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், அரசியல் அமைப்பு இலங்கையில் அத்தியாவசியமான பிரச்சினை கிடையாது. அதனை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் கடு மையாக முயற்சி செய்கின்றது என்றால் அதனூடாக அரசியல் இலாபம் பெறுவதற்கே தவிர, நாட்டின் நலனுக்காக அல்ல. ஜனநாயகம், நீதியான தேர்தல் என்பவையே தற்போது இலங்கைக்கு அத்தியாவசியமாக உள்ளது.
 
இவற்றை முறையாகப் பாதுகாத்தால் நாட்டின் பொருளாதாரமும் மக்களும் தானாக அபிவிருத்தியடையும் சந்தர்ப்பம் கிடைக்கும். இதனையே சர்வதேச நாடுகளும் எதிர்பார்க்கின்றன. இன்று ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய சர்வதேச நாடுகளும் இலங்கையுடன் முரண்பட அரசாங்கத்தின் சுயநல அரசியல் போக்கே பிரதான காரணம் ஆகும்.
 
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகள் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைச் செய்தன. ஆனால், யுத்தம் முடிந்ததன் பின்னர் உள்நாட்டில் தேசிய பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகள், ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் உட்பட பல பிரச்சினைகள் தொடர்பாக முறையான வகையில் செயற்படாமல் அரசாங்கம் தனது அரசியல் தேவைகளையே கவனத்தில் கொண்டது.
 
இதனால், இலங்கையில் நீதி ஒழுங்கு மீறப்பட்டதுடன் ஜனநாயகம் அழிந்து போனது. இது தொடர்பாகவே ஐ.ந.வும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேசமும் இலங்கைக்கு அழுத்தங்களையும் தலையீடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஜே.வி.பி என்ற வகையில் நாம் ஒருபோதும் சர்வதேசத் தலையீடுகளை அனுமதிக்க மாட் டோம். ஆனால் தற்போதைய தலையீடுகளை அரசாங்கமே வரவழைத்துக் கொண்டுள்ளது.

ஜி.எஸ்.பி. போன்ற மிகவும் முக்கியமான சர்வதேச நிவாரண உதவிகள் இலங்கைக்குக் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் இலாபத்திற்காக சிங்கள மொழியில் சண்டித்தனத்தையும், ஆங்கில மொழியில் மண்டியிட் டும் போலி வேசத்தில் உலாவிய இலங்கை அரசாங்கம், தற்போது உள்நாட்டு மக்களிடமும் சர்வதேசத்திடமும் மாட்டிக்கொண்டுள்ளது எனக் கூறினார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.