இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
-
இவ் விடயம் 13. 03. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 12:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.
தமக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அநேகமான ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை சுய கட்டுப்பாட்டுடன் வெளியிட்டு வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இலங்கை தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளது.
சிரேஸ்ட பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த ஆண்டில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அரசாங்க விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக அரசாங்கத்தின் உயரதிகாரிகள் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவான வகையில் செய்திகளை வெளியிடுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிடுவதில் ஊடகங்கள் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எவ்வாறெனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் சில சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்த காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் வெகுவாக பதிவாகியிருந்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர் முகாம்களின் நிலைமைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பயன்படுத்தப்பட்டு வந்த சிறுவர் போராளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டிடயுள்ளது.