ஓமந்தை தொடருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது
-
இவ் விடயம் 13. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 12:50க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஓமந்தை தொடருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அடுத்த மாதம் 5ம் திகதி இது திறந்து வைக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு பகுதிக்கான தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகளின் முதற் கட்டமாக வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை மீளமைக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே வவுனியா தொடக்கம் தாண்டிக்குளம் வரையிலான பணிகள் பூர்த்தியடைந்து தொடருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஓமந்தை வரையிலான 10கி.மீற்றர் நீளமான தொடருந்து பாதை புனரமைப்பு பணிகளும், தொடருந்து நிலையம் அமைக்கும் பணிகளும் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளன.
ஓமந்தை தொடருந்து நிலையத்தில் 200 மீற்றர் நீளமான நடை மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் ஓரிரு வாரங்களில் நிறைவடைந்து விடும். இதன் பின்னர் ஓமந்தை தொடருந்து நிலையத் திறப்பு விழா அடுத்த மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ளது.
இதன் போது சிறப்பு தொடருந்து ஒன்று சேவைக்கு விடப்படவுள்ளது.
சமூக சேவைகள் பிரதியமைச்சர் லயனல் பிறேமசிறியின் பொறுப்பிலேயே இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஓமந்தை தொடருந்து நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு 26 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள தொடருந்து நிலையம் நவீன வசதிகள், இணைய மையம், உணவகம், வணிக வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
அதே வேளை, வடக்கு பகுதி தொடருந்து பாதையில் அமையவுள்ள நிலையங்களை சர்வதேச தரத்தில் நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.