ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார் ‐ ரில்வின் சில்வா
-
இவ் விடயம் 13. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 13:10க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
அரசாங்கம் அனைத்து விடயங்களை மறைத்து சிங்களத்தில் பாரிய குரல் எழுப்பி வருவதுடன் வெளிநாடுகள் முன்னிலையில் மண்டியிட்டு அவர்களுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜே.வீ.பீயின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி;ல் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி, நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ளும் வெளிநாடுகளில் செயற்பாடுகளை ஜே.வீ.பீ நிபந்தனையின்றி எதிர்க்கின்றது. கடந்த காலங்களில் நாட்டின் உள்விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை ஜே.வீ.பீயே முதலில் எதிர்த்தது. இது தொடர்பில் தேவையான அனுபவங்கள் உள்ளன. ஆனால் இலங்கை உலகத்தோடு வாழ்கின்ற நாடு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையில் ஒருவித பிணைப்பு காணப்படுகிறது. எனினும் அரசாங்கம் கடந்த காலங்களில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வந்தது. சிங்களத்தில் ஒரு கொள்கையும் வெளிநாட்டவர்களுக்கு வேறொரு கொள்கையையும் அரசாங்கம் கடைபிடித்து வந்தது.
தேர்தல் காலம் என்பதால் அரசாங்கம் வெளிநாட்டினருக்கு தலைவணங்கி விட்டு, சிங்களத்தில் தேசப்பற்றை காண்பிக்க முயற்சிக்கிறது. இதன் காரணமாகவே அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை வெளியிடுகிறோம்.
அண்மைகாலமாக அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தலையீடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை சிங்களத்தில் வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்ததும் அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் கூட்டறிக்கையொன்று கையெழுத்திடப்பட்டதாக ஐக்கி நாடுகள் செயலாளர் நாயகம் கடந்த 10 ஆம் திகதி நியூயோர்கில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டறிக்கையின்படி அரசாங்கம் செயற்படவில்லை என அவர் தெளிவாக கூறியிருந்தார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சார்பில் லியான் பெஸகோவை அனுப்புவது தொடர்பில் ஜனாதிபதி இணங்கியதாகவும் ஐநா செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார். ஐநாவுடன் செய்து கொள்ளப்பட்ட கூட்டறிக்கை மக்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
பான்‐கீ‐மூன் கூறுவது போல் இலங்கைக்கும் ஐநாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டறிக்கையில் மூன்று விடயங்கள் அடங்கியுள்ளன.
நாட்டில் அரசியல் இணக்கத்துடனான கூட்டணியை ஏற்படுத்துவது, இடம்பெயர்ந்தவர்களில் பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த வேலைத்திட்டத்தை உருவாக்குதல், மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்பு ஆகிய மூன்று விடயங்கள் அந்த கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்விதமான அறிவிப்புகளை வெளியிடவில்iலை. தூதரங்கள் முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் அரசியல் கத்துகுட்டிகளும் இது பற்றி எதனையும் கூறுவதில்லை. தேர்தல் மேடைகளில் ஐக்கிய நாடுகள் சபையை சாடும் அரசாங்கம் திருட்டுத்தனமாக வெளிநாட்டு தலையீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.