சிறிலங்காவில் வாழும் சூழல்களில் முன்னேற்றம் – ஈழத்தமிழ் அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு

சிறிலங்காவிலும் ஆப்கானிஸ்தானத்திலும் சிறுபான்மையின மக்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் குறைந்து வருவதையடுத்து அவுஸ்ரேலிய அரசாங்கம் தமிழ் அகதிகளை மீண்டும் சிறிலங்கா அனுப்ப முயற்சி செய்து வருகிறது.

கிறிஸ்மஸ் தீவில் [Christmas Island] உள்ள 3 தமிழ் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றி மீண்டும் சிறிலங்கா அனுப்புவதற்கான முயற்சிகள் குடிவரவை கண்காணிக்கும் அதிகாரிகளால் [immigration officials] மேற்கொள்ளப்பட்டன.

இவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து பிற நாடுகளிலிருந்து வந்துள்ள மேலும் 35 பேரை திரும்பி அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு கிறிஸ்மஸ் தீவில் உள்ள தமிழ் அகதிகள் வெளியேற்றப்பட்டு வருவது அங்கு மேலும் அகதிகளாக வர நினைப்பவர்களை பயமுறுத்தி தடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு குறித்து அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்திடம் [UNHCR - United Nations High Commissioner for Refugees] கேட்ட போது,

“படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு சிறிலங்கா மற்றும் ஆப்கானிஸ்தானத்திலிருந்து அகதிகள் வருகின்றனர். விடுதலை புலிகளுடனான 20 ஆண்டு கால போர் முடிந்து விட்டதை தொடர்ந்து அங்கு தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் குறைந்து பலரும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறி வருகின்றனர்.

ஆதலால், இந்த இரு நாடுகளுக்குமான சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது” என அகதிகளுக்கான ஐ.நா.பிரதிநிதி ரிச்சர்ட் டோவ்லே [Richard Towle] தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

புனரமைப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்றவற்றில் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பினும் சரியான முறைகளிலேயே அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. அதனால் சிறிலங்காவிற்கான விதிமுறைகளை மீண்டும் ஆலோசிப்பதன் மூலம் அவர்கள் மேம்பாட்டிற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என தாங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசுகள் அகதிகளின் கோரிக்கைளை எண்ணிப் பார்த்து முடிவுக்கு வரும் பட்சததில் இந்த நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானத்திலும் வாழ்வதற்கான சூழ்நிலைகளில் முன்னேற்றம் தென்படுவதாக வெளிநாட்டு பயணங்களுக்கான அமைச்சர் கிறிஸ் எவன்ஸ் [Chris Evans] ABC வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அதற்காக ஒரே நாளில் அகதிகள் வருவது முற்றிலும் நின்று விடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகதிகளுக்கு அவரவர் தாய்நாடுகளில் ஆபத்தான சூழ்நிலைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்ற உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திவி தீவின் [Tiwi Islands] மேற்கு பகுதியில் 200 கிலோமீட்டர்களுக்கு அப்பால் 8 அகதிகள் மற்றும் நான்கு படகோட்டிகளுடனான படகு நேற்று தென்பட்டதாகவும் மேலும் மூன்று அகதி படகுகள் அவுஸ்திரேலிய கடலில் நின்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் தீவில் மொத்தம் 1872 பேர் இருப்பதாகவும் புதிதாக வந்து சேரும் அகதிகளால் அவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தர வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலிய அரசு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.