வடக்கில் போரால் தென்னைகள் அழிவு – ஆனாலும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை அமைக்கிறது சிறிலங்கா அரசு
-
இவ் விடயம் 13. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 22:21க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வட மாகாணத்தில் போரினால் பெரும்பகுதி தென்னைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பத்து தேங்காய் எண்ணெய் ஆலைகளை அமைக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னர் 83,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டிருந்தது.
போரினால் பெரும்பாலான தென்னந்தோட்டங்கள் அழிந்து, தற்போது வெறும் 37,400 ஏக்கர் பரப்பளவிலேயே தென்னைப் பயிர்கள் எஞ்சியுள்ளன.
இங்கு உற்பத்தியாகும் தேங்காய்கள் வடமாகாணத்தில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இல்லை.
இதனால் யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்றின் விலை 40 தொடக்கம் 50 ரூபா வரையில் விற்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் பத்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கென 30 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அலம்பில், பளை ஆகிய இடங்களிலேயே இந்த ஆலைகளை அமைக்கப் போவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம். ஜெயரட்ண அறிவித்துள்ளார்.
இவற்றின் மூலம் 20 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என்றும் 30,000 குடும்பங்களுக்கு நேரடியான வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை ஏற்கனவே அழிந்து போயுள்ள தென்னந்தோட்டங்களை மீளவும் உருவாக்கும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை. அதற்கு 5.54 மில்லியன் ரூபாவை மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
45,000 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் அழிந்து போயுள்ள போதும்- அவற்றை மீளமைப்பதற்காக அரசாங்கம் குறைந்தளவு நிதியையே ஒதுக்கியுள்ளது. இவற்றின் மூலம் 465 ஏக்கர் பரப்பளவிலேயே புதிய தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.
அழிந்து போயுள்ள தென்னைகளுக்குப் பதிலாக புதிய தென்னைகளை நாட்டுவதில் கவனம் செலுத்தாமல் சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் தேங்காய் எண்ணெய் ஆலைகளை அமைக்கப் போவதாக அறிவித்திருப்பதும் அதற்குப் பெருந்தொகை நிதியை ஒதுக்கியிருப்பதும் முரண்பாடான செயலாக அமைந்துள்ளது.