எமது தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அரசியல் அதிகாரம் எம்மிடமே இருக்கவேண்டும் – பொ. ஐங்கரநேசன்

நல்லது நடக்கும் என்று கடைசிவரையில் முள்ளிவாய்க்காலில் காத்திருந்து கொன்று குவிக்கப்பட்ட எமது உறவுகளை யார் மறப்பார்கள்? அவர்களது கனவுகளை  யார் தகர்ப்பார்கள்? தமிழ்மக்கள் எல்லோருடைய மனதிலும் தமிழ்த்தேசியம் என்பது ஒரு மந்திரச் சொல்லாகவே பதிந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் வாக்களித்து, வாக்களிக்கும் விழுக்காடு உயருமாக  இருந்தால் தமிழத்தேசியக் கூட்டமைப்பு அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றும் என்பது உறுதியென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும்  சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி: தமிழ்ச் சமூகத்தில் ஒரு சூழலியலாளனாக அடையாளப்பட்டிருக்கும் நீங்கள், இப்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றீர்கள். அரசியலில் நுழைந்தமைக்கான காரணம் என்ன?

பதில்: ஒரு தாவரவியல் ஆசிரியனாகப் பணியாற்றிய நான், அந்தப் பணியின் விரிவாக்கமாகவே சுற்றுச்சூழல் தளத்தில் இயங்க ஆரம்பித்தேன். போர் எமது சூழலை மோசமாகப் பாதித்தது. 90 களின் ஆரம்பத்தில் குடாநாட்டுக்கும் வன்னிப் பெருநிலப்பரப்புக்கும் இடையிலான தரைவழிப்பாதையை அரசு மூடியது. விறகுகளை வன்னியில் இருந்து எடுத்து வரமுடியாததால், எரிப்பதற்காக மக்கள் கடைசியில் கண்டல் காடுகளையே அழிக்கத் தொடங்கினார்கள். குடாநாட்டின் ஒரேயொரு காடு இதுதான். உட்கட்டுமானங்கள் சிதைந்து மலகூட வசதிகள் அற்றுப்போனதால் ஏராளமான யாழ்ப்பாணத்துக் கிணறுகளில் மலக்கிருமிகள் பெருகின. எங்கே, யாழ்ப்பாணச் சூழல் சீரழிந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏறத்தாழ எல்லாப்பாடசாலைகளிலும், சமூக அமைப்புகளிலும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டேன். ஓரளவுக்குப் பலனும் கிடைத்தது.

போருக்குப் பின்பான இந்தக் காலத்தில், அரசு வடக்கிலும் கிழக்கிலும் வளங்களை மிக வேகமாகச் சுரண்ட ஆரம்பித்துள்ளது. எமது சந்ததிகள் வாழ முடியாதவாறு இந்த மண்ணை சக்கையாகப் பிழிந்து போடும் முயற்சியில் அரசு திட்டமிட்டு இறங்கியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. இவற்றை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலேயே, எனது சுற்றுச் சூழல் செயற்பாட்டுத்தளத்தின் அடுத்த கட்ட நகர்வாகத் தேர்தல் அரசியலில் நுழைந்துள்ளேன்.

கேள்வி: அரசாங்கம் வடக்கை அபிவிருத்தி செய்வதாகக் கூறிவருகிறது நீங்கள் வளங்கள் சுரண்டப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறீர்களே?

பதில்: எமது பிரதேசம் அபிவிருத்தி அடையவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால், அந்த அபிவிருத்தி என்பது சுற்றுச் சூழலைப் பாதிக்காத, வருங்காலத் தலைமுறைகளுக்கும் வளங்களை விட்டுவைக்கக்கூடிய நீடித்த மேம்பாடாக (Sustainable development) அமையவேண்டும். யாழ்குடாநாடு சிறிய நிலப்பரப்புடைய, குடிசன அடர்த்தி கூடிய ஒரு விவசாய பூமி, பாரிய தொழிற்சாலைகளை அமைக்கக் கூடிய பிரதேசம் அல்ல. அப்படியிருக்கையில், அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் படுமுட்டாள்தனமாகக் காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலையைக் கொண்டுவந்தார்.

அது சுண்ணாம்புக்கற்களைத் தின்று, தூசுகளைக் கக்கி பல ஆயிரக்கணக்கானவர்களை நோயாளிகள் ஆக்கியதுதான மிச்சம். மூடிக்கிடக்கும் அந்தச் சீமெந்துத் தொழிற்சாலையை இயங்கவைக்கும் முயற்சிகளில் அரசு இப்போது தீவிரமாக இறங்கியுள்ளது. வேண்டிய அளவு சீமெந்தைக் குறைந்த விலையிலேயே இறக்குமதி செய்யமுடியும். இந்நிலையில் சீமெந்துத் தொழிற்சாலையை இயக்கிச் சுண்ணாம்புக் கற்களை மேலும் மேலும் அகழ்ந்தெடுப்பதென்பது சுரண்டல் அல்லாமல் வேறு என்ன? இதனை, குடாநாட்டினுள்ளே கடல்நீரை வலிந்து வரவழைக்கும் சதித்திட்டம் என்று நினைப்பதிலும் தவறில்லையே!

காங்கேசன்துறையில் சுண்ணாம்புக் கற்களை அகழும் வேலையை வெகுகாலத்துக்கு முன்பே அரசு இரகசியமாக ஆரம்பித்து விட்டது அண்மையில் கீரிமலைக்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டதன் பின்புதான் இந்த அவலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாரிய இயந்திரங்களின் துணைகொண்டு அதல பாதாளத்துக்குத் தோண்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் பெரும்பான்மைச் சமூகத்தினர் மாத்திரமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அகழப்படும் கற்கள் உடைக்கப்பட்டுத் தென் இலங்கைக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவதாகவும் உள்2ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கடலுக்கு அண்மித்த காங்கேசன்துறையில் சுண்ணாம்புக் கற்களை அகழ்வது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். இதனைத் தடுக்காதுவிடின், ஏற்கனவே அரசியல் அகதிகளாக அலையும் நாம் விரைவில் சூழலியல் அகதிகளாக இடம் பெயர்வதும் தவிர்க்க முடியாததாகி விடும்.

கேள்வி: அரசியலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் எவ்வாறான தொடர்பு இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

பதில்: பேரினவாத அரசியல் தேசியம் என்ற சொல்லின் அர்த்தப் பரிமாணங்களை முழுமையாக உணர்ந்து கொள்ளாத அல்லது உணர மறுக்கின்ற நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது. சிங்கள மக்கள் ஒரு தேசிய இனம். அவர்கள் வாழ்ந்து வருகின்ற தென் இலங்கையின் சுற்றுச் சூழல் அவர்களது தேசியச் சூழல் (National Environment). அதே போன்றுதான் இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளான தமிழ்மக்களும் தனித்த ஒரு தேசிய இனம். எமக்கெனத் தனித்துவமான பண்பாடும், செழுமையான மொழியும் உண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற வடக்கு- கிழக்கு இணைந்த நிலப்பரப்பு எமது தாயகம்.  இங்கு காணப்படக்கூடிய தாவர – விலங்கு இனங்கள் மற்றும் இயற்கை வளங்கள் எல்லாம் சேர்ந்து எமது தேசியச் சூழல். இரண்டு தேசியச் சூழல்களுமே உயிரினங்களின், இயற்கை வளங்களின் பல்வகைமையிலும் பகிர்மானத்திலும் வேறுபட்டவை. இலங்கை அரசு தேசிய மரமாகக் கொண்டாடும் மெசுவா (Mesua) மரம் தமிழ்த் தேசியச் சூழலில் இல்லை. இந்த மரம் பற்றிய பூரண அறிவு எமக்குக் கிடையாது. எமது பனைமரத்தின் பெறுமதி சிங்கள தேசத்துக்குத் தெரிந்திருந்தால் தென்மராட்சியில் பனைவளம் எறிகணைகளால் பேரழிவைச் சந்தித்திருக்காது.

ஒவ்வொரு தேசிய இனமும் அதன் தேசியச் சூழலுடன், இரத்தமும் சதையும் என்பார்களே அதுபோல ஒரு அங்கமாகச் சேர்ந்தே பரிணாமித்து வந்துள்ளது. இதனால் ஒரு தேசிய இனத்துக்கு அதன் தேசியச் சூழல் குறித்தே பூரணமான புரிதல் இருக்கமுடியும். இதன் அடிப்படையிலேயே, எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அரசியில் அதிகாரம் எம்மிடமே  இருக்க வேண்டும் என்கிறோம். அப்போதுதான் எமது இயற்கையின் வளமும் அளவும் குன்றாத அக்கறையுடன் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். மாறாக, வேறுபட்ட பண்பாட்டையும் மொழியையும் கொண்ட ஒரு பேரினவாதத் தேசிய இனம், அதுவும் இன்றைய உலகமயமாக்கல் நிலையில் எம்மை ஆளுகை செய்யின் அது எமது வளங்களைச் சூறையாடுவதாகவே அமையும். இயற்கை அழிந்தால் இயற்கையால் நாமும் அழிவோம் என்பதுதானே சூழலியல் நியதி.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

பதில்: தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் பேரம் பேசும் பெரும் சக்தியாக விளங்கினார்கள். அவர்களுடைய ஆயுத பலம் இலங்கை அரசால் இன்று மூர்க்கத்தனமாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களைக் கையில் எடுப்பதற்குக் காரணமாக அமைந்த அரசியற் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்படாமல் இன்னமும் அப்படியே நீடிக்கின்றன. அத்தோடு, எம்மீது திணிக்கப்பட்டு வந்த போரால் மனிதவளம் முற்றாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. எமது இயற்கை சார்ந்த வாழ்புலமும் அதன் உயிர்ப்பும் கொலை செய்யப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறது. அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மாத்திரம் அல்லாமல் எமது இயற்கை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணுவதற்கும் தமிழ்த்தேசிய அரசியல் அவசியம் என்று கருத்தை உடையவன் நான். இக்கருத்து நிலையை அடியொற்றியே எனது செயற்பாடுகளை  மேற்கொண்டுவந்துள்ளேன். நாம் நிர்க்கதியாகவுள்ள இந்தச் சூழ்நிலையில், மாறியுள்ள களநிலையைக் கருத்தில் கொண்டு யதார்த்த பூர்வமாகவே தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதற்குப் பொருத்தமான அமைப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உள்ளது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வெற்றி வாய்ப்பு யாழ்மாவட்டத்தில் எவ்வாறு உள்ளது?

பதில்: யாழ் மாவட்டத்தில் பதினைந்து கட்சிகளையும் பன்னிரண்டு சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கைத் தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவது ஒன்றும் தற்செயல் அல்ல. விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த அரசு அடுத்த கட்டமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாது ஒழிக்கவே முயற்சிக்கின்றது. தமிழ்மக்களின் வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காகவே அரசு இவ்வளவு வேட்பாளர்களையும் இறக்கியுள்ளது. இவர்களுக்காகப் பலகோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கின்றது.

இந்தச் சூழ்ச்சிக்கு மெத்தப்படித்த மேதாவிகள் பலரும், இதுநாள் வரையில் தேசியம் பேசிய பலரும் துணை போயிருப்பதுதான் பெரும் சோகம். ஆனால், நல்லது நடக்கும் என்று கடைசிவரையில் முள்ளிவாய்க்காலில் காத்திருந்து கொன்று குவிக்கப்பட்ட எமது உறவுகளை யார் மறப்பார்கள்? அவர்களது கனவுகளை  யார் தகர்ப்பார்கள்? தமிழ்மக்கள் எல்லோருடைய மனதிலும் தமிழ்த்தேசியம் என்பது ஒரு மந்திரச் சொல்லாகவே பதிந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் வாக்களித்து, வாக்களிக்கும் விழுக்காடு உயருமாக  இருந்தால் தமிழத்தேசியக் கூட்டமைப்பு அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றும் என்பது உறுதி.

இதனால், மக்கள் பெருமளவுக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காக அரசோ அல்லது அரசு சார்பானவர்களோ கடைசி நேரத்தில் முயலக்கூடும். விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்ளலாம். அல்லது, ஜனாதிபதித் தேர்தலில் இடம் பெற்றதைப் போன்று ஆங்காங்கே குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தலாம். தமிழ் மக்கள்  இவற்றைப் பொருட்படுத்தாது  தேர்தலில் வீட்டுச்சின்னத்துக்கு நேரே வாக்களிப்பதை ஒரு தேசியக் கடமையாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று வேண்டுகிறேன்.

- சந்திப்பு: செல்வா

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.