நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் அணிகள் ஊடுருவியுள்ளன

e0aeb5e0aebfe0ae9fe0af81e0aea4e0aeb2e0af88e0aeaae0af8d-e0aeaae0af81e0aeb2e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8dநீண்ட நாட்களுக்கு சிறிலங்கா படையினரின் பின்னணி நிலைகளுக்குள் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள் ஊடுருவியுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் ‘லக்பிம’ ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ‘லக்பிம’ வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியின் தென்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர், தனது காவலரணில் இருந்து கடற்கரை பக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.09) நள்ளிரவு சென்றிருந்தார்.

அங்கு சென்றவர், நீண்ட நேரம் தாண்டிய நிலையிலும் மீண்டும் திரும்பாததாலும் சந்தேகம் கொண்ட அந்த காவலரணில் கடமையில் இருந்த மற்றைய படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவரைத் தேடிச் சென்றார்.

அவர், கடற்கரையை அண்மித்த போது முதலில் சென்ற படைத்தரப்பைச் சேர்ந்தவர், தலையில் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக படைத்தரப்பைச் சேர்ந்தவர் உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்.

விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள் கடல் வழியாக 55 ஆவது டிவிசன் படையணியின் பின்னணி நிலைகளுக்குள் ஊடுருவியதை 55 ஆவது டிவிசன் படையணியின் மூத்த அதிகாரிகள் அப்போது தான் உணர்ந்து கொண்டனர்.

மேலதிக படையினர் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 10:00 மணியளவில் பற்றைக்குள் மறைந்திருந்த விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை அடையாளம் கண்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர், அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்.

இத்தாக்குதலில் காயமடைந்த விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் சரணடைவதற்கான சைகைகளை காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, படைத்தரப்பைச் சேர்ந்தவர், அவரை அண்மித்த போது, அந்தப் பெண் விடுதலைப் புலி உறுப்பினர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்ததனால் படைத்தரப்பைச் சேர்ந்தவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.

இத்தாக்குதலின் போது அவருடன் வந்திருந்த மற்றைய பெண் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், மீண்டும் இரண்டாம் ஆம் நாள் அப்பகுதியில் தேடுதல்கள் நடத்தப்பட்ட போது, படையினரின் நான்கு பேரைக் கொண்ட கொமோண்டோ அணி ஒன்று விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளின் பதுங்கி தாக்குதலுக்கு உள்ளாகியதில் மூன்று பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட, அக்குழுவினை வழிநடத்திய கோப்ரல் தர அதிகாரி தப்பிச் சென்றுவிட்டார்.

இதனிடையே, சிறிலங்கா படையினருடனான மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அணிகளிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பொருட்கள் படையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஊடுருவி உள்ளனர். 

இதனை நோக்கும் போது விடுதலைப் புலிகளின் அணிகள் நீண்ட நாட்களுக்கு படையினரின் பின்னணி நிலைகளுக்குள் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இந்த அணிகள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் எனவும் படைத்தரப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.