தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது–எல்.கே.அத்வானி

advani20lal20krishnaஇலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது என்று நாகர்கோவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அத்வானி பேசினார்.பா.ஜனதா கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கியது.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி, தேர்தல்

பிரசாரத்தை தொடங்கி வைத்தும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-

1969-ம் ஆண்டும், 1979-ம் ஆண்டும் நாகர்கோவில் தொகுதியில் காமராஜ் நாடார் வெற்றி பெற்றுள்ளார். இந்த பகுதி இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்கு நாடார் சமுதாயம் எவ்வளவு அரும்பணி ஆற்றியுள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். அதுபோல் தாணுலிங்க நாடார் இந்து முன்னணியின் தலைவராகவும், சமுதாய தலைவராகவும் இருந்து சமுதாய பாதுகாப்புக்காக செயலாற்றி உள்ளார்.

அதனால்தான் இந்த தொகுதியின் வேட்பாளராக, முதல் வேட்பாளராக நான் பொன்.ராதாகிருஷ்ணனை அறிவித்திருக்கிறேன்.

கல்வி கற்பவர்களுக்கு சாதி, மதம் எதுவும் கிடையாது. ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மதத்தின் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக நான் பாராளுமன்ற அவையில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஏழை, எளியவர்கள் என்ற முறையில்தான் சலுகைகள் இருக்க வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற முறையில் சலுகைகள் இருக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளேன்.

இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 5 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த காங்கிரஸ் அரசையும், அதற்கு முன்பிருந்த பா.ஜனதா அரசையும் ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங்கிடம் பிரதமர் பதவி இருக்கிறது. ஆனால் அதிகாரம் கிடையாது. சோனியாவிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் அவரிடம் பொறுப்பு இல்லை. எனவே இந்த தேர்தலில் தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியையும், அதற்கு முன்பிருந்த பா.ஜனதா ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காளதேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அவற்றை கட்டுப்படுத்துவதிலும், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சினையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்றுப்போய்விட்டது.

எனவே முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 3 செயல்திட்டங்களை மக்கள் முன் வைக்க உள்ளது. ஒன்று நல்லாட்சி. 2-வது மேம்பாடு. 3-வது பாதுகாப்பு. நல்லாட்சி என்றால் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதம் தேர்தல் முடிந்தபிறகு அரசியல் வானில் மிகப்பெரும் புரட்சியும், மாற்றமும் ஏற்பட்டிருக்கும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு அத்வானி பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.