எதிர்வரும் வாரத்துக்குள் நான்காவது ஈழப்போரின் முடிவு தெரிந்து விடும்: சிறிலங்கா படைத்தரப்பு

slarmyவன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானவை; எதிர்வரும் வாரத்துக்குள் ஈழப்போர் – 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும் என சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானது. எதிர்வரும் வாரத்திற்குள் ஈழப்போர் – 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும்.

படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதில் விடுதலைப் புலிகள் பலத்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே, அவர்கள் பாரிய ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

விடுதலைப் புலிகள் தற்போது 45 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

58 ஆவது டிவிசன்  படையணி மீது கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு பெரும் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சிறிய குடாக்களில் நிலைகொண்டிருந்த 58 ஆவது டிவிசன் படையணியின் நிலையிடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டதனைத் தொடர்ந்து, 58 ஆவது டிவிசன் படையணி தமது நிலைகளை பின்நோக்கி நகர்த்தியிருந்தனர்.

இந்த குடாக்களை கைப்பற்றி அங்கிருந்து படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம்.

விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக படைத்தரப்பு கடந்த இரண்டரை வருடங்களாக அதிக இழப்புக்களை சந்தித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.