தமிழர் கோரிக்கைகளை மௌனித்துப் போகச் செய்ய இயலாது – சுரேஸ் பிறேமசந்திரன்
-
இவ் விடயம் 18. 04. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 17:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
13ஆவது திருத்தச் சட்டம் ஒரு கையால் கொடுத்து, மறுகையால் பறிக்கும் தன்மை கொண்டது. பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் தமிழர் கோரிக்கைகளை மௌனித்துப் போகச் செய்ய இயலாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். செவ்வியின் முழு விபரம் வருமாறு:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அராசங்கத்துடன் சேர்ந்து செயற்படவேண்டுமென அரசு தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையா? அவ்வாறு உங்களுக்கு அழைப்புக் கிடைத்துள்ளதா? இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
இதுவரை அரசு தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக எதுவித அழைப்பும் வரவில்லை. அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டதாகவே விளங்குகின்றது. எனவே யாரையும் தனது பக்கம் இழுக்க வேண்டும் என்ற தேவை அரசுக்கு இருக்குமென நான் கருதவில்லை ஆனால் 2/3 பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவைப்படலாம். 2/3 பெரும்பான்மை என்பது ஏன்? என்னத்திற்காக? என்பதைப் பொறுத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக முடிவெடுக்கும்.
தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவர 2/3 பெரும்பான்மை தேவையெனில் அது தொடர்பாக நாம் சாதகமாக ஆய்வு செய்வோம். மாறாக வெறுமனே குடும்ப ஆட்சியை, சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தத் தான் 2/3 பெரும்பான்மை தேவைப்பட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த உதவி தேவைதானா? என்பதை அச்சமயத்தில் தீர்மானிக்கும்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்படன்தான் பேச வேண்டுமென்பதற்கான அங்கீகாரத்தை வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கியுள்ளனர். இருப்பினும் அரசாங்கம் அனைத்துத் தமிழ்த் தரப்புடன் பேசியே தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று கூறினால் இதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
நீங்கள் கூறியது போன்றே வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தமது தலைமை என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பதை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, வன்னி போன்ற இடங்களில் கூட்டமைப்பைத் தவிர வேறு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவில்லை.
யாழ்ப்பாணத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது தலைமை சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை நியாயபூர்வமாக தீர்க்க விரும்பும் எவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனேயே பேசவேண்டும். இதனை வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவினை வழங்கி தம்மை ஆட்சியில் அமர்த்தியுள்ளதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதே போன்று தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அமோக ஆதரவளித்து எம்மைத் தெரிவு செய்துள்ளனர்.
இதனை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டுமென்ற செய்தியை நாம் அரசாங்கத்துக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம், உங்களால் தயாரிக்கப்பட்டு வரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இவை இரண்டும் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? இவை இரண்டும் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? இவை இரண்டினையும் முன்வைத்தா உங்கள் எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்?
எமது தேர்தல் விஞ்ஞாபனம் ஏற்கனவே மக்கள் முன் வைக்கப்பட்டு அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்துள்ளனர். அதில் உள்ள அரசியல் விடயங்களும், உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில்தான் எமது பேச்சுவார்த்தைகள் அமையும். தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரை, புதிதாக வந்திருக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் எனக் கருகின்றேன்.
இவை இரண்டினையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாமல் மாற்றுத் திட்டம் ஒன்றினை அல்லது முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
13வது திருத்தச் சட்டத்தில் முறையான அதிகாரங்கள் இல்லை என்பதும், ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பதும், சிங்கள புத்தி ஜீவிகளின் முடிவு. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பேராசிரியர் பீரிஸ் போன்றவர்களும் இதனையே கூறியுள்ளனர். இந் நிலையில் 13 வது திருத்தத்தைப் பற்றிப் பேசுவது அர்த்தமற்றதாகும்.
நிலம்(காணி) தொடர்பான அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் போன்றவையும், நிதி தொடர்பான அதிகாரங்களும் முழுமையாக இல்லாவிட்டால் அப் பிரதேசத்து அபிவிருத்தி என்பது சாத்தியப்படாமல் போய்விடும். எனவே தான் 13வது திருத்தம் போதிய அதிகாரங்களைக் கொண்டதல்ல என்பதுடன், ஒருகையால் கொடுத்து ஒரு கையால் பறிக்கும் சட்ட அதிகாரங்களையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே இவை யாவும் மாற்றப்படவேண்டும்.
எனவே அரசியல் சாசனம் என்பது அர்த்த புஷ்டி உள்ளதாக சிறுபான்மை இனங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளக் கூடியதாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அது மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
அரசாங்கம் மாற்றுத் திட்டம் ஒன்றை வைக்குமாக இருந்தால், அது தமிழ் மக்களின் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதாக அதன்அடிப்படையில் உருவாக்கப்படும் ஓர் தீர்வுத்திட்டமாக அது இருக்கவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்தி அடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பழகவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய புத்தி சொல்லியுள்ளதே?
ஜாதிகஹெல உறுமய இந்த நாட்டை சீரழிக்கின்ற ஓர் கூட்டம், இவர்கள் இந் நாட்டின் பன்மைத்துவத்தை நிராகரித்து ஒரே இனம், ஒரே நாடு என்ற கொள்கைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
இது சிங்கள, பௌத்த மேலாண்மை வாதத்தை நிறுவி வேறு எந்த இனமும் இந்த நாட்டுக்கு உரியதல்ல, ஏனையவர்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து ஒரே இனமாக வேண்டியவர்கள் என்ற அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டவர்களாகவே இவர்கள் விளங்குகின்றனர்.
எனவே ஹெலஉறுமய கூறுவதைப் போன்று நடந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் முட்டாள்களின் கட்சியல்ல. ஒரே நாட்டிற்குள் பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
எனவே இவை தொடர்பான கருத்துப் பரிமாற்றமோ பேச்சுவார்த்தையோ ஆட்சி பீடத்தில் இருக்கின்ற ஜனாதிபதியுடனும், அரசுடனுமே தவிர சிங்கள, பௌத்த கடும் போக்காளர்களுடன் அல்ல என்பதுடன் நாட்டை மேலும் மேலும் சீரழிக்காமல் ஒதுங்கி இருப்பது ஹெல உறுமயவுக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது.
வடக்கும் கிழக்கும் இணைந்ததாகவே இருக்கவேண்டுமென்பதனையே உங்களது கட்சி விரும்புகின்றது. இந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா?
வடக்கும் – கிழக்கும் இணைந்ததே தமிழர் தாயகம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலைக் கல்லாக (Corner Stone) வடக்கு – கிழக்கு இணைப்பே இருந்தது. அது ஓர் சர்வதேச ஒப்பந்தம். அதனை ஒரு தலைப்பட்சமாக இலங்கை நீதிமன்றம் நிராகரிக்க முடியாதென்பதே எமது நிலைப்பாடு. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தான் பேச்சுவார்த்தையின் அடிப்படையாக இருக்கும். வட மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த நேரத்தில் அது தொடர்பாக சரியான முடிவெடுக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் பிரிந்து செல்வதற்கு அரசாங்கமும் காரணமாகவே இருந்தது என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இது நோக்கப்படுகிறது. ஆனால், எதிர் பார்த்தது ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் பிரிந்து சென்றவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
வடக்கு – கிழக்கு மக்கள் நேர்மையான, கௌரவமான, தமது பிரதேசங்களை தாமே அபிவிருத்தி செய்யக்கூடிய ஓர் தீர்வை நாடி நிற்கின்றார்கள் என்பதையும், அதற்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரே ஒரு அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதையும் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள்.
எமது வாக்குகளை பிரிக்கும் முகமாக அரசாங்கத்தால் களத்தில் இறக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுயேட்சைகள் தமது கட்டுப்பணத்தை இழந்துள்ளதுடன், எம்மில் இருந்து பிரிந்து சென்று, எமது பாதை பிழையெனக் கூறி சம்பந்தர், சுரேஸ், மாவை போன்றோரை தோற்கடிக்க வேண்டும் என முழங்கியவர்களும், தமிழ் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசும், ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களின் மனோ நிலையை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தாங்கள் ஏமாளிகளல்ல என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளும், 5% குறைவான வாக்கைப் பெற்று அர்த்தமற்ற குழுக்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த இறுதி நிமிடத்திலாவது சகல தமிழ் கட்சிகளும், ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். இதனை புரியாதவர்கள் எரிர்காலத்தில் அரசியல் களத்தில் இருந்து மக்களால் அகற்றப்படலாம். மக்களின் இடப்பெயர்வு, கஷ்ரம், துன்பத்தை தமக்கு சாதமாக பயன்படுத்தியவர்கள், இன்று அம்மக்கள் கொடுத்த தீர்ப்பின் பின்னாவது ஓரணியில் திரளவேண்டும்.
அதே போன்று தனது பிரித்தாளும் தந்திரங்கள் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை மௌனித்து போகச் செய்ய முடியாது என்பதை அரசாங்கமும் யோசிக்க வேண்டும். மிகப் பாரிய இனப்படுகொலைகள், இடப்பெயர்வு, யுத்தத்தால் ஏற்பட்ட முழுமையான அழிவு இவற்றுக்கு பின்னரும், தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பை அரசும், சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும். அவர்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள முன்வரவேண்டும். அரசாங்கத்தின் கடும் போக்கு பிரச்சினைகளை தீர்காது என்பதையும் அரசாங்கம் உணரவேண்டும்.
கடந்தமுறை 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை குறைவான ஆசனங்களை பெற்றமையானது உங்கள் கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனரென்பதையும் அரசாங்கத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதையுமே காட்டுவதாக அமைச்சர் கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்தாரே?
கடந்த தேர்தலில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் வாக்களித்தார்கள். அன்று ஓர் யுத்த நிறுத்தம் இருந்தது. பேச்சுவார்த்தை நடந்தது, மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மக்கள் சுமூகமாக வாக்களிக்கும் சூழ் நிலை இருந்தது. அந்த நேரத்தில் 22 ஆசனங்கள் எமக்குக் கிடைத்தன.
இன்று ஓர் பாரிய யுத்தத்திற்கு பின்பு, 50 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு, 3 லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டு, முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு, விடுதுலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, சிங்கள இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமை நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையிலும் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் தான் தெரிவு செய்துள்ளனர் என்பதை கருணா புரிய வேண்டும்.
மட்டக்களப்பில் தனது கட்சி சார்பாக ஒரு தமிழனை வெல்ல வைக்க முடியவில்லை என்பதுடன் தான் வெல்லமாட்டேன் என்பதற்காகவே தேசியப் பட்டியலில் ஆசனம் கேட்டு நிற்கும் கருணா, கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் ஆளும் கட்சிக்கு தமிழ் வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் கூறுவது அர்த்தமற்றது.