“வன்னி மக்களை அனைத்துலக நாடுகள் கைவிட்டு விட்டன”: ‘ஈழநாதம்’ நாளேடு சாடல்

eelanaatham_1“வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் தமிழர்களை அனைத்துலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் கைவிட்டு விட்டன” என்று வன்னியில் இருந்து வெளிவரும் ‘ஈழநாதம்’ நாளேடு சாடியுள்ளது. இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை (07.03.09) வெளிவந்த ‘ஈழநாதம்’ ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு – குறிப்பாக வன்னியில்  யுத்தப்பகுதியில் பெரும் அவலத்தின் மத்தியில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கத்தவறி விட்டது என்றே கூறுதல் வேண்டும்.

ஒரு வகையில் பார்க்க போனால் வன்னி மக்கள்  மனிதாபிமான உதவிகள்  வழங்கப்படுவதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுதல் பொருத்தப்பாடானதாகும்.

சிறிலங்கா அரசு வன்னியில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறுவதைத் திட்டமிட்டுத் தடை செய்தது என்பதில் கேள்விக்கு இடமில்லை.

இதற்கென அது ஒரு புறத்தில் வன்னிக்கான விநியோகங்கள் குறிப்பாக அரச மற்றும் தனியார் (வர்த்தகர்கள்) மூலமான விநியோகங்களை படிப்படியாக குறைத்து வந்ததோடு தடையும் செய்தது.

அடுத்ததாக, வன்னியில் பணியாற்றி வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றியதன் மூலம் வன்னி மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடக்கியது.

அரசின் பணிப்புக்களைப் புறந்தள்ளி பணியாற்றிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு படைகள் தாக்குதல்கள்  நடாத்தி அவற்றின் செயற்பாடுகளையும் முடக்கியதோடு நிவாரணப் பொருட்களை அழிவிற்கும் உள்ளாக்கின.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையானது வன்னி மக்களின் வாழ்க்கையை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பது சகல அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஐ.நா போன்ற அனைத்துலக அமைப்புக்களாலும் புரியப்பட்டே இருந்தன. ஆனால், இவ்விடயத்தில் இவ் அமைப்புக்கள் போதிய அக்கறை கொண்டிருந்தனவா? என்பது கேள்விக்குரியதே

இதனை ஒருவகையில் பார்க்கப்போனால் வன்னியில் ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் போக்க அவை முற்படவில்லை என்றே கூறலாம்.

இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மைக்குப் புறம்பான யதார்த்தத்திற்கு மாறான பிரச்சாரத்தையும் வாக்குறுதிகளையும் அவை  நம்பியமை காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் நாளுக்கு முன்னராகவே அன்றி சில நாட்களுக்கு பின்னதாகவோ யுத்தம் முடிவிற்கு வந்துவிடும் என சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டு வந்தது.

ஆகையினால் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் அதாவது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வவுனியா கொண்டு செல்லப்படும் வன்னி மக்களுக்கு அங்குள்ள தடுப்பு முகாம்களில் வைத்து நிவாரணம் வழங்க அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தம்மை தயார்படுத்திக்கொண்டால் போதும் என்பதே அவர்களின் அறிவுறுத்தலாக அமைந்தது.

இதனை ஐ.நா. நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட நம்பின. இதன் காரணமாக அவை வவுனியாவில் நிவாரணப் பணிகள், வன்னி மக்களை அவர்களின் சொந்ந இடங்களில் இருந்து வெளியேற ஒத்துழைத்தல் போன்ற விடயங்களில் அவர்கள் காட்டிய அக்கறை அளவிற்கு வன்னியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அவை சிந்திக்கவில்லை.

இதன் விளைவே மக்களுக்கான மனிதாபிமான பணியாற்றுவதில் அவை தோல்வி கண்டவையாயின. இது ஒரு வகையில் அவை தமது நேக்கத்தில் இருந்து தவறின, அன்றி ஏமாற்றப்பட்டன என்றே கூறுதல் வேண்டும்.

அவ்வாறு இல்லாதுவிடின் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து வன்னி மக்களுக்கான மனிதாபிமான தேவைகளை வழங்காது புறந்தள்ளின என்றே அர்த்தப்படும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.