முத்துக்குமார் மரணமும் -சில …லாம்களும் சில வேண்டும்களும்!

muthukumar2அரசும் சட்டமும் தத்தமது கடமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளன…

தமிழகம் கொதித்தெழுந்திருக்கிறது..!

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய இளையத் தலைமுறையும் வெகுண்டெழுந்துள்ளது.

அரசியல் நோக்கத்தை மறந்து… இலங்கையிலுள்ள தொப்புள் கொடி உறவுகளின் உயிரைக் காத்திட பல தலைவர்களையும் ஒன்றினைத்துள்ளது, முத்துக்குமாரின் தீம்பிழம்பு!

இவ்வேளையில், மாநில அரசும் சட்டமும் தத்தமது கடமையைச் செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மறு உத்தரவு வரும் வரை கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன; பிப்ரவரி 4 முழு அடைப்புக்கு அரசின் எச்சரிக்கை…. தொடர்கிறது கடமைகள்!

சில ……லாம்கள்!

* முத்துக்குமார் மூட்டிய தீ… போராட்டமாக மாநிலம் முழுவதும் மேலும் பரவாமல் இருக்க தடுக்கப்படலாம்.

* இலங்கைத் தமிழருக்கான போராட்டத்தின் வீரியத்தை இருட்டடிப்புச் செய்யுமாறு ஊடகங்களின் ஓனர்களிடம் கேட்டுக்கொள்ளப்படலாம்.

* ஊடகங்களின் ஓனர்கள் சிலரும் தங்களது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொள்ளலாம்!

* கொதிப்புடன் உண்மையை எடுத்துச் செல்லும் ஊடகவியலாளர்களின் பேனாக்களும், கீ போர்டுகளும் முடக்கப்படலாம்!

* ‘அமைதிப்படை’ பாணியில் வேறு பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, இப்போதைய முழுமுதற் பிரச்னையின் வீரியம் குறைக்கப்படலாம்!

சில ……வேண்டும்கள்!

* முத்துக்குமார் மூட்டிய தீயை பாதகமற்ற நிலையில் ஏந்திச் செல்ல வேண்டும்.

* முத்துக்குமாரின் நோக்கத்தை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்.

* இந்தியச் சுதந்திரத்துக்காக இளைஞர்கள் மத்தியில் புரட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பகத்சிங் உயிரை துச்சமாக மதித்து, தப்பிக்காமல் அதைப் போக்கிக் கொள்ள முனைந்தாரே தவிர, அவரைப் போலவே இளைய சமுதாயம் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதுபோலவே, இலங்கைத் தமிழருக்காக தமிழக இளைஞர்களிடம் இருந்து புரட்சி வெடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொண்டார் என்பதை உணர்ந்து ஆரோக்கியமான முறைகளில் செயல்பட வேண்டும்.

* ஆங்காங்கே சிதறிச் செயல்படுவது பலமல்ல; ஒன்றிணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

* இயன்றவரையில், தனித்து இயங்காமல் நல்லதொரு வழிகாட்டுதலை நாடவேண்டும்.

* அரசியல் ஆதாயங்களைக் கழட்டிப் போட்டுவிட்டு (தற்காலிகமாக என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம்) ஒன்றிணையும் தலைவர்களின் வழிநடத்தலைப் பின்பற்ற வேண்டும்.

* உணர்வுகள் தூண்டப்பட்டாலும், சிலிர்த்தெழாமல் செயல்பட வேண்டும்.

* வன்முறைகளில் ஈடுபட்டு பலவீனமடையாமல் செயல்பட வேண்டும்.

* மொத்தத்தில், இன்றைய காலக்கட்டத்திலும் அறப்போராட்டத்துக்கு வல்லமை உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.