உலக நாடுகள் கைவிட்ட எங்களை நீங்களாவது காப்பாற்றுங்கள்: புலம்பெயர் மற்றும் தமிழக மக்களிடம் வேண்டுகோள்

naduவன்னி மக்களுக்கு அவசர உணவு மற்றும் மருத்துவ உதவி கோரி ‘வன்னி மக்கள் நலன் பேணும்’ அமைப்பு அவசர வேண்டுகோளை புலம்பெயர் மற்றும் தமிழக மக்களிடம் விடுத்துள்ளது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளனில் இயங்கும் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பி.கனகலிங்கம் கடந்த வியாழக்கிழமை அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“21 ஆம் நூற்றாண்டில் இப்படியொரு கொடூர மனிதப் படுகொலைகளா என மனித சமூகம் வெட்கித் தலைகுனியக்கூடிய அளவில் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு இருக்கின்றது.

இது குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிர எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இது தொடர்பாக அனைத்துலக நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ பாராமுகமாக இருக்கின்றது என்பதால் ‘வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு’ தங்களுக்கு அவசரமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

கடந்த இரு மாதங்களாக சிறிலங்கா அரச படைகளால் 2,500-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் 4,000-க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தும் உள்ளனர். இது ஒரு அப்பட்டமான இன அழிப்பு என்ற போதும் ஐக்கிய நாடுகள் சபை கொள்ளாமை ஐக்கிய நாடுகள் சபை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

நாங்கள் உணவு, மருந்து மற்றும் உறையுள் என அடிப்படை வசதிகள் அற்று மனித வாழ்வியலுக்கு பொருந்தாத வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழின அழிப்புப் போர் காரணமாக வன்னியில் வாழும் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களாகிய நாங்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மாபெரும் மனித பேரவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது குறித்து நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு முறையிட்ட போதும் இது தொடர்பாக எங்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக உள்ளது.

இந்நிலை நீடித்தால் எமது மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் பட்டினிச் சாவை எதிர்கொள்ளவும் நேரிடும். இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புக்கள் எங்களுக்கு துணையிருக்கும் என எண்ணினோம். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை எங்களை கைவிட்டுவிட்டதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இந்த வேளையில் வன்னி மக்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். எமது மக்கள் பலவழிகளிலும் சிறிலங்கா அரசால் கொல்லப்பபடுவதை உலகம் மௌனமாக அனுமதிப்பது போல் உணர்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையை முறியடிக்கக்கூடிய வல்லமையை புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளுக்கு இருப்பதாகவே உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்.

தற்போது வன்னியில் உணவு மருந்து கையிருப்பு முற்றாகத் தீர்ந்து போய் உள்ளது. இதுவரை 11 பேர் பட்டினிச் சாவை அடைந்துள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

இவ்வாறான பேரவலத்தை சந்தித்து நிற்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வளங்களை உடனடியாக அனுப்பி வைப்பதன் மூலம் எமது மக்களின் உயிர்காப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டி நிற்கின்றோம்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.