மாமனிதர் சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் நடைபெற்றது

மாமனிதர் “தராகி” சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு “தமிழர் சட்ட ஆலோசனைக் குழு” ஏற்பாட்டில் நேற்றிரவு லண்டனில் நடைபெற்றது.

மத்திய லண்டனிலுள்ள ஹோபோர்ன் (Holborn) பகுதியிலுள்ள றெட் லயன் சதுக்கத்திலுள்ள அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள், பல்துறை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மங்கல விளக்கினை “மாமனிதர்” சிவராமின் சகோதரர் சூரி, சிறப்புப் பேச்சாளர்களான மார்க் விற்றெகெர், லீ கரு, ஆனந்தி சூரியப்பிரகாசம், மற்றும் வினோ கணபதிப்பிள்ளை ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதனையடுத்து அக வணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து, மாமனிதரின் நீண்டகால நண்பரும், “Learning Politics from Sivaram”என்ற நூலை எழுதியவருமான அமெரிக்க தென் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான மார்க் விற்றெகெர் (Mark Whitaker), “மாமனிதர்” சிவராமின் உறவினரான சட்டவாளர் லீ கரு, பி.பி.சி தமிழோசையின் முன்னாள் பணிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசம், லண்டன் தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனையடுத்து, மாமனிதர் சிவராமின் நீண்டகால நண்பரும், ஊடகவியலாளரும், முன்னாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மாமனிதரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நினைவு நாள் நிகழ்வின் இறுதியில் பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சியான மரபுக் கட்சியின் இல்போர்ட் (Ilford) வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளின் வேட்பாளர்களான லீ ஸ்கொட் (Lee Scott), மற்றும் ரோனி பட்லர் (Tony Butler) ஆகியோரும் தமது பரப்புரை வேலைப்பழுவின் மத்தியிலும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், தமிழ் மக்களிற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் உறுதியளித்தனர்.

தமிழ், ஆங்கில ஊடகத்துறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்து, சிறந்த படைத்துறை, அரசியல் ஆய்வுகளை வழங்கிய சிவராம் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் “மாமனிதர்” என்ற தமிழீழத்தின் அதியுயர் மதிப்பளிப்பினை வழங்கியதன் ஊடாக “மாமனிதர்” சிவராமின் பணிகளை மதிப்பிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.