வரலாற்று சிறப்பு மிக்க நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

பிரித்தானியாவில் நடைபெறும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் மக்கள் திரண்டு வாக்களிப்பு நிலையங்களில் தங்கள் வாக்குகளை அளித்துவருகின்றனர்.

வரலாற்றுச்சிறப்பு மிக்க தேர்தலாக கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

பிரித்தானியாவில் இன்று காலை 8:00 மணிக்கு ஆரம்பமான இந்த வாக்களிப்பு நிகழ்வு தமிழர்கள் தமக்கென்றோர் அரசமைக்க இடும் முதல் வாக்கு என்பதால் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தேர்தலில் தாமும் வாக்களித்து வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவலோடும், கடப்பாடோடும் சென்று வாக்களிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
 
இன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள வடமேற்கு லண்டன் வாக்களிப்பு நிலையத்தில் நாடுகடந்த தமிழீழத்திற்கான முதலாவது வாக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நின்று தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
இதில் இன்று அதிகாலையே வடகிழக்கு லண்டன் பகுதியில் (இல்பேட்) வேட்பாளரான திரு. கவிராஜ் சண்முகநாதன் (இலக்கம்-104), மற்றும் வடமேற்கு லண்டன் பகுதியில் ( கொலிண்டேல்) திரு. நிமலன் சீவரத்தினம் (இலக்கம்-408) அவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
 
நாட்டிற்காகவும், மக்களின் விடுதலை பெற்ற சுதந்திர வாழ்வுக்காகவும் தாம் தமது வரலாற்றுக்கடமையினை செய்துள்ளோம் என்ற திருப்தியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதை காணக்கூடியதாக இருந்தது.
 
காலநிலை சரி இல்லாது இன்று கடும் மழை பெய்துவரும் வேளையிலும் மக்கள் அதனை பொருட்படுத்தாது வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.