கனடா வாழ் இளைஞர்களால் “மறவோம்” நிகழ்வு முன்னெடுப்பு

கனடா ரொறன்ரோவின் நோர்த் யோர்க் என்னும் இடத்தில் உள்ள இளைஞர்களால் “மறவோம்” கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமையன்று ஜேன் பின்ச் சந்திப்புக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையின் ஓராண்டு நினைவாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலை ஐந்து மணிக்கு இந்த கவனயீர்ப்பு நிகழ்வு தொடங்கியது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர்.

மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் எமது மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டதை தெரிவிக்கும் முகமாக கறுப்புத் துணியால் வாயைக் கட்டியிருந்தனர்.

அதே சமயம் தற்போது எமது மக்கள் அனுபவித்துவரும் பல்வேறு கொடுமைகளை சித்திகரிக்கும் பதாகைகள் மற்றும் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

ஏழு மணியளவில் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காகவும் அப்பாவிப் பொதுமக்களுக்காகவும் மெழுகுதிரி ஏற்றினார்கள்.

இதன்பின் இளைஞர்களும் மக்களும் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை தாம் முன்னெடுத்துச் செல்வோம் என்று சபதம் எடுத்தனர்.

அத்துடன் அந்த நிகழ்வு நிறைவு பெற்றது. பெருமளவிலான தமிழீழத் தேசிய கொடிகளை அங்கு வருகை தந்த மக்கள் ஏந்தியிருந்தது தமிழீழதிற்கான போராட்டம் புதிய உத்வேகம் பெறுவதை உணர்த்திநின்றது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.