புல்மோட்டையில் அமைக்கப்படும் வைத்தியசாலை உண்மையில் இந்திய இராணுவத்தின் முகாமாகும் – ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் குற்றச்சாட்டு

jvp-t-200யுத்தத்தினால் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென்ற பெயரில் புல்மோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் வைத்தியசாலையானது உண்மையிலேயே இந்திய இராணுவத்தின் முகாமாகும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் வெற்றிகளை காட்டிக் கொடுத்து இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வொன்றின் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இலங்கையில் புலிகள் மாத்திரம் பிரிவினைவாதிகள் அல்ல. வேறு சில ஆயுதம் ஏந்திய ஏந்தாத பிரிவினைவாத சக்திகளும் உள்ளன என்றும் அவர் கூறினார். ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று கோட்டை “”சோலிஸ்” ஹோட்டலில் நடைபெற்றபோது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரில்வின் சில்வா கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பாவோ உதவி செய்ய தேவையில்லை. எமது இராணுவத்தினரே இன்னும் ஒரு சில நாட்களில் இலங்கை பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியும் அதற்கு அப்பால் சென்றும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சியானது மீண்டுமொருமுறை பிரிவினைவாதிகளுக்கு சட்டபூர்வமாக செயல்பட அனுமதி வழங்குவது போன்றதாகும்.

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குமாறு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, திஸ்ஸ விதாரண, டிலான் பெரேரா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கோரி வருகின்றனர். தேர்தல் மேடைகளில் தேசப்பற்றுள்ளவர்கள் என்று கூறும் நபர்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும் நாட்டை காட்டிக் கொடுக்கும் சதித் திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.