(2ம் இணைப்பு) நாடு கடந்த அரசின் அங்குரார்ப்பணக் கூட்டம் ஆரம்பம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்றைய தினம் பிலடெல்பியா நகரில் பிற்பகல் 1.20 அளவில் ஆரம்பமாகி உள்ளது.

இந்த நிகழ்வை சுவீடனில் இருந்து வருகை தந்திருந்த மதியுரைக்குழுவின் உறுப்பினரும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் அமர்வுக்கான ஒழுங்கமைப்பாளருமான திரு. சிறீஸ்கந்தராஜா அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இது அழுகைக்காக அமைக்கப்பட்ட சாமாதியல்ல இது உறுதியின் அமைவிடம் என்ற வாசகங்களுடன் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள மேடையில் வீர காவியமான மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன.

தமிழீழ தேசியக் கொடியும் அமெரிக்க தேசியக் கொடியும் பறந்து கொண்டிருந்த மண்டபத்தில் ஈழ விடுதலை வேள்வியில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய  பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களுக்கான அஞ்சலியுடன் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தற்போது கடந்த ஆண்டில் உலகின் கண்களால் மறக்கப்பட்டிருந்த தமிழினப் படுகொலைகளை நினைவுகூரும் விதமாய் அந்த இன அழிப்பின் கோரத்தை விளக்கும் சில காட்சிப் பதிவுகள் ஒளிப்படங்களாக காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

2ம் இணைப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வின் முதல்நாள் நிகழ்வுகள் தற்பொழுது நிறைவடைந்திருக்கின்றது. இன்றைய அமர்வில், இரண்டாவது சுற்றில் அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தலா ஒவ்வொரு பிரதிநிதிக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இவ்வேளையில் தவிர்க்கமுடியதா சந்தர்ப்பங்களினால் அமெரிக்காவிற்கு வரமுடியாத உறுப்பினர்கள் லண்டனில் இருந்தும் ஜெனிவாவில் இருந்தும் video conferencing மூலம் கலந்து கொண்டனர்.
 
இவ்வுரைகளைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டுக்குழுத் தலைவர் விசுவநாதன் ருத்ரகுமாரன் உரையாற்றினார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.