முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு – பிரித்தானியா

முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் “நினைவுப் பேரிணைவு வணக்க நிகழ்வு” பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுடன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.

மாலை 4:15 அளவில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம், தீப வணக்கம், மற்றும் சிறப்புரைகள்  இடம்பெற்று இரவு 8:00 மணியளவில் உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

இந்த நிகழ்வில் பிறென்ட் வடக்கு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பறி கார்டினர், இல்போர்ட் வடக்கு ஆளும் கொன்ஸ்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், மனித உரிமையாளர் விக்கி சன்ட்றெஸ், ஹெயிஸ் மற்றும் ஹெலிங்ரன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனா, பசில்லோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான், முள்ளிவாய்க்காலில் கடந்த ஆண்டு மே 17ஆம் நாள்வரை தங்கிருந்து மீண்ட கிருபா, பிறென்ட் லிபரல் டெமோகிறட் நகரசபை உறுப்பினர் ஜேம்ஸ் அலி, ஈலிங், சவுத்தோல் தொகுதி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா, பிரித்தானிய இந்து சபையின் செயலர் குப்தா, லெஸ்ரர் தொகுதி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், ஐரோப்பிய ஒன்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் இவான்ஸ், லிபரல் டெமோக்கிறட் தாராண்மைவாதக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் சைமன் ஹியூஸ், மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற அன்றூ ஜோர்ஜ் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
 
இவ்வாறு உரையாற்றிய அனைவரும் சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான விசாரணையை வலியுறுத்திய அதேவேளை, போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை மனுவிலும் கையொப்பமிட்டதுடன், வணக்கம் செலுத்திய மக்களும் அவ்வாறு கையொப்பமிட்டுள்ளனர்.
 
அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் கறுப்புடையணிந்து காணப்பட்டதுடன், மிகவும் உணர்வெழுச்சியுடன் மலர் வணக்கத்திலும், தீப வணக்கத்திலும் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.
 
பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வில் நிறைவாக பொதுமக்களால் எடுக்கப்பட்ட உறுதியுரை:
 
“முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில், கனத்த இதயங்களோடு கலந்து கொண்டிருக்கிற நாங்கள், இந்தப் பேரவலத்திற்குக் காரணமான போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும்வரை ஓய மாட்டோம் என்றும், பேரவலத்திற்கு உள்ளான எமது உறவுகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முடிந்தவரை உழைப்போம் என்றும் இந்த நேரத்தில் உறுதியெடுக்கின்றோம்.
 
  “தமிழர்களின் தாகம், தமிழீழத் தாயகம்”

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.