புதுக்குடியிருப்பு ஊடறுப்புத் தாக்குதலின் போது புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது: கொழும்பு ஊடகம்

air_wing1புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற ஊடறுப்புத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம்  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சுமார் 30 பேர் கொண்ட தாக்குதல் அணி ஒன்று புதுக்குடியிருப்பில் சிறிலங்கா இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்றவேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டுத் தாக்குதலை  மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவ 58வது படைப்பிரிவினால் புலிகளின் விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதலின் போது அரச படையினரின் 3 யுத்த டாங்கிகள் மற்றும் துருப்புக் காவி வாகனம் என்பன சேதமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள்  வெளியிட்டுள்ள தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

எனினும்  வான் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகளின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.