மாத்தறை குண்டுத்தாக்குதல் ஏற்படுத்தும் சந்தேகங்கள்???

mahinda-200_52சிறீலங்காவின் தென்பகுதியான மாத்தறை கொரகிட்டிய அக்குரஸஸையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சிறீலங்கா மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இலக்கு வைக்கப்பட்ட இடம், மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் என்பன இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துவதாக உள்ளன.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ள சிறீலங்காவின் தபால் தொடர்பு அமைச்சர் மகிந்த விஜயசேகர சிறீலங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிறீலங்காவின் ஆளும் கூட்டமைப்புக்கு தாவிய ஒருவர்.

அண்மைக் காலங்களாக அவர் சிறீலங்காவின் போர் நடவடிக்கைகள் பற்றி கருத்து கூறுவதில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியிருந்துள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.

அது மட்டுமல்லாது இவர் அண்மையில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சிதாவிக் கொண்ட கரு ஜயசூரியவின் நெருங்கிய சகா. எனவே எச்சந்தர்ப்பத்திலும் சிறீலங்காவின் ஆளும் கூட்டணியில் இருந்து தாவிக் கொள்ளும் நிலையில் இருந்தார்.

அநுராதபுரம் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் தாக்குதல் உட்பட தென்னிலங்கை தாக்குதல்கள் பற்றி சிறீலங்காவின் ஆயுதக்குழு ஒன்றின் மீது சிங்கள மக்கள் சந்தேகப்பட்டவண்ணம் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறைகள் செய்துவரும் கருணாவின் ஆயுதக்குழு மீது அவர்களது சந்தேகங்கள் காணப்படுகின்றன.

கருணா சிறீலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய சற்று முன்னர் அனுராதபுரத்தில் வைத்து சிறீலங்காவின் முன்னாள் படைதுறைத் தளபதி ஜானக பெரேரா மற்றும் அவரது மனைவி மற்றும் பல ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனை சிறீலங்கா அரச தரப்பு விடுதலைப்புலிகளின் தாக்குதல் என்று உடனடியாகவே குற்றஞ்சாட்டியது. ஆனால் இன்னும் அது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நீதிமன்றினால் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் இன்றும் அதாவது கருணா அமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்தில் அதே பாணில் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி பிரமுகர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து 15 நிமிடத்தில் எத்தனைபேர் தாக்குதலில் பலியானார்கள் மற்றும் காயமடைந்துள்ளார்கள் என்னும் தகவல்கள்கூட திரட்டப்படாத நிலையில் சிறீலங்காவின படைத்துறைப்பேச்சாளர் இது விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் எனவும், உர்ந்துருளியில் வந்த குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இருவரை அதற்கான ஆதாரங்கள் எவையும் சமர்பிக்கப்படவில்லை என்பதுடன் அரச உயர் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுக்குள் எவ்வாறு ஒரு உர்ந்துருளி பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

அதாவது சிறீலங்காவின் எரிபொருள்துறை அமைச்சர் பெளசி, அமைச்சர் மகிந்த சமரசேகர, அமைச்சர் அமீர் அலி மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ள இடத்திற்கு எவ்வாறு உர்ந்துருளியில் ஒருவர் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

மற்றயது இன்றைய இலக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள இடம். அதாவது நபிகள் பிறந்த தினத்தினை கொண்டாட இஸ்லாமியர் கூடிநின்ற இடமாகும்.

இவை அனைத்தையும் நோக்குமிடத்து மாத்தறை குண்டு வெடிப்பில் பல சந்தேகங்கள் எழுவதுடன், இலங்கையின் எதிர்காலம் பற்றி தமிழ், சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதாவது மகிந்த மற்றும் அவரது சகோதரர்களால் இயக்கப்படும் ஆயுதக்குழுக்கள், அத்து மீறிச் செயல்படும் அரச படைகள் என்பன சிங்கள் மக்கள் மீதும் வெகுவிரைவில் பாயலாம் என்னும் அச்சம் அவர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.