சிறீலங்கா படையினருக்காக தோட்டத் தொழிலாளர்களிடம் இரத்தம் அபகரிப்பு

bloodசிறீலங்காவின் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளின் உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி இரத்தத்தை பெற்று வன்னியில் காயமடைந்துவரும் படையினருக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தம் வழங்குவது உடல் நலத்துக்கு நன்கு சிறந்தது என்றும், இரத்தம் வழங்கினால் ஒருமுறை வழங்க 250 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களிடம் இருந்து குருதியை பெற்றுக்கொள்வதாகவும், பின்னர் பணம் எதுவும் வழங்காமல் அவர்கள் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இவ்வாறு பணம் வழங்காது குருதியை பெற்றுவிட்டு அக்குழுவினர் சென்றுவிட ஆத்திரமடைந்த குருதிக் கொடையாளர் சிலர் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரது வீட்டை முற்றுகையிட்டபோது இந்த தகவல் வெளிவந்துள்ளது.

அனைத்துலக சட்டங்களின்படி பணம் கொடுத்து குருதியைப் பெற்றுக்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால் சிறீலங்காவில் தொடரும் போரினால் பெரும் தொகை படையினர் தொடர்ந்தும் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வரும் நிலையில் அவர்களுக்கான குருதிக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை இருந்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து சிறீலங்காவின் அரசியல்வாதிகள் பலர் நாட்டுப்பற்று என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி இவ்வாறு குருதியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.