இலங்கையில் தமிழர்கள் படுகொலை: ராஜபக்சே கூண்டில் நிறுத்தப்படும் காலம் வரும்: வைகோ ஆவேச பேச்சு

e0aeb5e0af88e0ae95e0af8bஇலங்கையில் தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்ச கூண்டில் நிறுத்தப்படும் காலம் வரும்’ என்று வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கூறினார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பொதுக்கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 4 பக்கமும் எதிரிகள் ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். நம் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் இருக்கிறது. இதுபோல் பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆயுதங்களும் அவர்களது கைகளில் இருக்கின்றன. இந்த நிலையில், வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் பேசும்போது, கிளிநொச்சி விழுந்துவிட்டது, முல்லைத்தீவு பிடிபட்டது, ஆனையிறவு சாய்ந்தது என்று கூறினார். இலங்கையில் ராஜபக்ச சொல்வதை போல் டெல்லியில் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். இத்தனையையும் சொல்லிவிட்டு தமிழர்களிடம் வந்து ஓட்டு கேட்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க போகிறார்களாம், சுடுகாட்டில் மறுவாழ்வு கொடுத்து என்ன பயன்? ஈழத்தமிழர்களுக்கு கொடுப்பதற்காக மத்திய அரசு சார்பில் மருந்து ஏற்றிக்கொண்டு கப்பல் இலங்கைக்கு செல்கிறது. அதை இலங்கை மந்திரி பெற்றுக் கொள்கிறார். அந்த மருந்துகள் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச் சேருமா? இலங்கையில் போரை நிறுத்தும்படி மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை.

போரை நிறுத்தச்சொல்லி உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு சொல்லிவிட்டன. ஆனால் மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை. இதனால் உலக நாடுகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதற்காக தான் நாங்கள் கையெழுத்து இயக்கத்தை அறிவித்து இருக்கிறோம்.

மருந்து இல்லாமல் உணவு இல்லாமல் ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஈழதமிழர்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் நாதியற்று போகவில்லை. 71/2 கோடி தமிழர்கள் நினைத்தால் ராஜபக்ஷவை தண்டிக்க முடியாதா? ஒருநாளில் ராஜபக்ச கூண்டில் நிறுத்தப்படுவார். அப்போது வட்டியும் முதலுமாக அவருக்கு கொடுக்காமல் விடமாட்டோம். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்துவருகிறது. அதற்கு என்ன காரணம்? ஏவி இருப்பது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் தான். மேற்கண்டவாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

கடந்த 6 மாதங்களாக தீவிரமாக நடைபெறும் ஈழதமிழர் மீதான இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தச் சொல்லி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் வீரச்சாவுக்கு பிறகு இந்த இயக்கத்தின் பணி தீவிரமாகி இருக்கிறது. ஆனாலும் போர் நிறுத்தம் இன்னும் வரவில்லை. இந்த படுகொலையை தாண்டி இதுவரை உலக வரலாற்றில் எங்கேயும் நடந்திராத வகையில் ராஜபக்ஷ இலங்கை தமிழர்களுக்கு உணவும் மருந்தும் வழங்க தடை விதித்து இருக்கிறார்.

கடந்த 4 மாதங்களாக வெறும் அரிசி கஞ்சியை மட்டும் இலங்கை தமிழர்கள் ஒருவேளைக்கு மட்டும் சாப்பிட்டு வருகிறார்கள். அதை குடித்துக் கொண்டு தான் விடுதலை புலிகள் போரிட்டு வருகிறார்கள். இந்த அளவிற்கு பட்டினி போட்டு மக்களை கொன்று வருகிறது இலங்கை அரசு.

இப்படிப்பட்ட நிலைமையில் நாம் தேர்தலை சந்திக்க போகிறோம். இந்த இனப்படுகொலைக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறது மத்திய அரசு. அதுதான் பெரிய கொடுமை. இலங்கை அரசுக்கு இந்தியா வேண்டுமென்றே உதவி செய்கிறது. மத்திய அரசின் வெளியுறவு கொள்கை மாறவேண்டுமானால் ஒட்டுமொத்த தமிழர்களும் கொந்தளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்க வேண்டும். 61/2 கோடி தமிழர்கள் தமிழகத்திலும் 10 கோடி தமிழர்கள் உலகம் முழுவதிலும் கேட்பதற்கு யாருமில்லை என்கிற அளவிற்கு உள்ள நிலைமையை எத்தனை காலம் வேடிக்கை பார்க்க முடியும். ஈழப்படுகொலையை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது தான் முத்துக்குமார் போன்றோரின் உயிர் தியாகத்திற்கு ஈடு செய்வதாகும். மேற்கண்டவாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.