காரணம் தேடும் ஆய்வுத் தொடர்: தமிழீழம் மிகக் கடினமான தெரிவுகளுக்குள் காலடி வைத்தது!!! – உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 13

இக் கட்டுரைத்தொடரில் நாம் இதுவரை வெவ்வேறு விடயங்களை உலக அரசியல் ஒழுங்குப் பரப்பிலிருந்தும் புவிசார் அரசியல் தளத்திலிருந்தும் அணுகி வந்திருக்கிறோம்.

உலகில் அரசுகளே பலம் மிக்கவையாக உள்ளன என்பதனையும், அவை தமக்கிடையிலான ஒரு குழுமமாக இயங்கி வருவதனையும் இக் குழுமத்தினுள் தமது நன்மை கருதி மட்டுமே புதிய அரசுகளை உள்வாங்கும் தன்மையினை அரசுகள் கொண்டுள்ளமையினையும் நோக்கியிருந்தோம்.

பொதுவாக இங்கு அரசுகள் எனக் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கிடையிலான போட்டிகளையும், அணிகளையும், இவ் அணிகள் சார்ந்த உலக ஒழுங்குப் போக்குகளையும், இரட்டை மைய, ஒற்றை மைய, பல் மைய உலக ஒழுங்கு நிலை தழுவி இவ் அரசுகளுக்கிடையிலான உறவுகள் அமையக்கூடிய நிலைமைகளையும் கடந்த கட்டுரைத் தொடர்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்த வகையில் கவனத்திற் கொண்டிருந்தோம்.

தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியப் பகுதிகளில் தமிழீழம், சிறிலங்கா, இந்தியா சார்ந்த புவிசார் அரசியல் போக்குகளையும் இவற்றுக்கிடையிலான புவிசார் அரசியல் முரண்களையும் ஆய்வுக்குட்படுத்தியிருந்தோம்.

இவற்றின் அடிப்படையில் தமிழீழம் தனிநாடாக அமைவதனை இந்தியாவும் சிறிலங்காவும் விரும்பாத நிலைமைகளையும், அதன் காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகில் கடினமான ஒரு போராட்டமாக தன்னை நிலைநிறுத்த வேண்டிய சூழல் உருவாகியிருந்தமையினையும் குறித்துச் சென்றிருந்தோம்.

1990 ஆம் ஆண்டின் பின் உருவான பனிப்போருக்குப் பின்னரான காலத்தில் உலக ஒழுங்கில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களுக்கு எதிரான உலகப்போக்கு உருவாகியமைக்கான காரணங்களையும், அவ் உலகப்போக்கில் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டமும் அகப்பட்டுக் கொண்டதால் தமிழீழ விடுதலைப் போராட்டம் மேலும் கடினமான போராட்டமாக மாறியிருந்தமையினையும் அவதானிப்புக்குட்படுத்தியிருந்தோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைக் கவனத்துக்கெடுத்து, அவை போராட்டத்திற்கு ஏற்படுத்திய சாதக பாதக அம்சங்களையும் மதிப்பீடு செய்திருந்தோம்.

இவையெல்லாம் நாம் இக் கட்டுரைத்தொடரில் ஆராய முற்பட்ட ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு காரணங்களாக அமைந்திருக்கூடிய காரணிகளுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.      

இவ் அங்கம் 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை அனைத்துலக உறவுகள் (International relations), நாடு கடந்த அல்லது தேசம் கடந்த உறவுகள் (Transnational relations) என்ற இரு கோட்பாடுகளையும் ஆய்வுக்கெடுத்தவாறு நோக்குகிறது.

இவ்வாறு நோக்குவது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழம் அனைத்துலக உறவுகள் சார்ந்தும், நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் சார்ந்தும் எட்டியிருந்த உறவு நிலையினையும் அதன் முக்கியத்துவத்தையும் குறித்துச் செல்ல உதவும்.  

இவற்றைப் பற்றி நோக்கும் முன்னர் அனைத்துலக உறவுகள், நாடு கடந்த அல்லது தேசம் கடந்த உறவுகள் எனக் கூறப்படுபவைக்கு இடையிலான வேறுபாடுகள்தான் என்ன என்பது தொடர்பாக நோக்கிச் செல்லல் கூடுதல் பொருத்தமுள்ளதாக இருக்கும்.

Inter-national relation என்பதனை சர்வதேச அல்லது அனைத்துலக உறவுகள் என நாம் தமிழில் பயன்படுத்தி வருகிறோம்.

இது உண்மையில் நாடுகளுக்கிடையிலான அல்லது தேசங்களுக்கிடையிலான உறவுகள் என்ற அர்த்தத்தைக் குறித்து நிற்கும் பதமாகும்.

இங்கு national என்பது nation என்ற பெயர்ச் சொல்லில் இருந்தே பிறக்கிறது. Nation என்பதனை நாம் தமிழில் பொதுவாகத் தேசம் என்று அழைப்போம்.

International என்பது தமிழில் தேசங்களுக்கிடையிலான என்ற கருத்தைக் கொண்டிருப்பினும் இது ’சர்வதேச’ எனும் மொழிபெயர்ப்போடுதான் தமிழில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ‘சர்வதேச’ எனும் மொழிபெயர்ப்பானது தேசங்கள் அனைத்தையும் இணைத்த ஒரு அலகாக உணரப்பட்ட அளவுக்கு ‘தேசங்களுக்கிடையிலான’ என்ற அர்த்தத்தைப் பெரிதும் தரவில்லை.

சர்வம், தேசம் என்பன சுத்தமான தமிழ்ச்சொற்கள் அல்லாமல், வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்தவையான இருந்தமையாலோ என்னவோ சுத்தமான தமிழ்ச் செற்களைப் பயன்படுத்தல் என்ற சிந்தனை வளர்ந்தபோது ‘சர்வதேச’ என்பதற்குப் பதிலாக ‘அனைத்துலக’ என்ற சொல்லும் பயன்பாட்டில் வந்தது.

இம் மொழிப் பாவனை மாற்றமும் தமிழுக்கு உதவியளவுக்கு இதன் கருத்துப் புரிதலுக்கு உதவியதா என்பது கேள்விக்குரியதே. இருப்பினும் International என்பதற்கு அனைத்துலக எனும் தமிழ்ச் செல்லையே இக் கட்டுரைத் தொடர் பயன்படுத்துகிறது.

இதேவேளை, சுத்த தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் தொடர்பாக இக் கட்டுரைத் தொடரின் நிலைப்பாட்டையும் இவ்விடத்தில் குறித்துச் செல்லல் பொருத்தமானது.

இக் கட்டுரைத்தொடர் சுத்தமான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கடும் பத்திய நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

கூறவரும் விடயத்துக்குப் பொருத்தமான, மக்களுக்குப் புரியக்கூடிய சொற்களைப் பயன்படுத்துவதில் இத் தொடருக்கு ஆர்வம் அதிகம் உண்டு.

சுத்தமான தமிழ் சொற்கள் பொருத்தமானவையாக இருந்தால் இவற்றைப் பயன்படுத்துவதில் இக் கட்டுரைத்தொடருக்கு விருப்பம் உண்டு.

இதேவேளை, சுத்தமான தமிழ் தேடிச் சென்று மொழியில் உள்ள சுகத்தைத் தவற விடுவதிலும் கட்டுரைத் தொடருக்குச் சம்மதம் இல்லை.

ஒரு தடவை பேராசிரியர் சிவத்தம்பி சொன்னார்.

‘நல்லூரின் வீதிதனில் நடந்தது யாகம்

நாலு நாள் சென்றதும் சுருண்டது தேகம்’

‘எல்லாத்துக்கும் சுத்தத் தமிழ் தேடினால் இந்த அருமையான வரிகளையும் எல்லோ தொலைச்சுப் போடுவம்.’

சர்வதேச அல்லது அனைத்துலக உறவுகள் என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் தேசங்களுக்கிடையிலான உறவுகளாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இவை நடைமுறையில் தேசங்களுக்கிடையிலான உறவுகளாக இல்லாமல் அரசுகளுக்கிடையிலான உறவுகளாகவே இருக்கின்றன.

உலகில் ஏறத்தாழ 200 நாடுகளும் அவற்றிற்குரிய அரசுகளும் இருக்கின்றன. ஆனால் இன, மத, மொழி, பண்பாட்டு வேறுபாடுகளில் தனித்துவங்கள் கொண்ட, மக்களாக தம்மை வகைப்படுத்தக்கூடிய (peoplehood), அத் தகமைக்கு உரிமை கோரக்கூடிய மக்கள் குழுமங்கள் 2000 க்கும் மேற்பட்டவை உலகில் உள்ளன.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் 2000 அலகுகளுக்கு இடையே இருந்திருக்க வேண்டிய அனைத்துலக உறவுகள் 200 அலகுகளுக்குள் சுருங்கிப்போய் இருக்கின்றன.

அரசுகள் ஒருபோதும் அரசுகளற்ற அலகுகளுடன் சமத்துவமான நிலையில் உறவுகளைப் பேண விரும்புவதில்லை. அனைத்துலக உறவுகள் என்ற தளத்தில் அரசுகள் அல்லாதவர்களுக்கு இடம் கொடுக்கவும் விரும்பவதில்லை.

அனைத்துலக உறவுகள் அரசுகளுக்கிடையிலான உறவுகளாக இருப்பதனால் அரசுகளைத் தம்வசப்படுத்தி வைத்திருக்கும் தேசங்களுக்கு அனைத்துலக உறவுகளில் கூடுதல் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

உலகில் பல நாடுகளின் அரசுகள் பல தேசங்களை அடக்குமுறைக்குட்படுத்தியே தமது அரசாட்சியினை நிலைநிறுத்தியுள்ளன.

இலங்கைத்தீவில் சிங்கள தேசத்தின் அரசும் தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வைத்திருக்கும் அந்நிய ஆட்சியாகவே இருக்கிறது. இதனை முன்பொரு தடவையும் இக் கட்டுரைத் தொடரில் குறித்திருந்தோம்.

காலனித்துவ ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும்போது அக் காலத்தில் வரையப்பட்ட எல்லைகள், அதிகாரபீடங்கள் அரசுகளை கொண்டிராத தேசங்களுக்கு அடிமைத்தளைகளை பூட்டுகின்ற அடிப்படைகளை வழங்கின. காலப்போக்கில் இவற்றிற்கு எதிரான போராட்டங்களும் முகிழ்த்தெழுந்தன.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இத்தகைய ஒரு போராட்டமே. இப் போராட்டத்தின் ஊடாக தமிழர் தேசமும் தனது அனைத்துலக உறவுப் பரிமாணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திகிறது.

தமிழர் தேசமும் தன்னை ஒரு சக்தியாக நிலைநிறுத்தி ஏனைய அரசுகளுடன் தொடர்புகளைப் பேணவும் சிறிலங்கா அரசுடன் ஒப்பீட்டளவில் சமத்துவநிலையில் அமர்ந்து விடயங்களைக் கையாளவும் கூடிய தகமையை 2002 இல் தமிழர் தேசம் எட்டியது.

இது குறித்துத் தொடர்ந்து நோக்கு முன்னர் transnational relations எனப்படுகின்ற நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் என்ற விடயத்தை பற்றியும் சற்று நோக்கிக் கொண்டு முன்னே செல்வோம்.

இங்கும் மொழிபெயர்ப்பானது trans-national என்பதற்கு நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

இதற்குரிய அர்த்தத்தைத் தேடுவதாயின் அது தேச-அரசுகளின் (nation states) எல்லைகளைக் கடந்த உறவுநிலை என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்.

1990 களில் இந் நாடு அல்லது தேசம் கடந்த உறவுநிலை சமூக, அரசியல் ஆய்வாளர்களின் கூடுதல் கவனத்தைப் பெற ஆரம்பிக்கிறது.

நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் தொடர்பாக மேலிருந்து கிளம்பும் நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள், (transnational relations from above), கீழிருந்து கிளம்பும் நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் (transnational relations form below), குறுகிய நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் (narrow transnational relations), பரந்த நாடு அல்லது தேசம் கடந்த உறவுகள் (broad tranantional relations) உள்ளடங்கலாக மேலும் பலவகைகளில் இவ் உறவுநிலை அமைந்திருப்பதாக கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

நாம் இங்கு பேச வரும் விடயத்துக்கு இக் கோட்பாட்டு வேறுபாடுகள் பெரிதும் அவசியம் இல்லாதமையால் நாம் இவ் வேறுபாடுகள் குறித்த விளக்கத்தை இங்கு நோக்கவில்லை.

இங்கு எமக்குத் தேவையான முக்கியமான வேறுபாடு அனைத்துலக உறவுகள் (international relations) என்பதற்கும் நாடு கடந்த உறவுகள் என்பதற்கும் (transnational relations) இடையே உள்ள வேறுபாடுதான்.

இந்த வேறுபாட்டை இக் கட்டுரைத்தொடர் பின்வருமாறு குறித்துக் கொள்கிறது.

அனைத்துலக உறவுகள் என்பது நாம் முன்னர் நோக்கியவாறு அரசுகளுக்கிடையிலான உறவு நிலையைக் குறித்து நிற்கும். அரசுகள் தமக்கிடையே மேற்கொள்ளும் உடன்பாடுகள், அவைக்கிடையே எழும் முரண்பாடுகள், இடம்பெறும் இராணுவக் கூட்டுக்கள், வர்த்தக முயற்சிகள், இராஜதந்திர உறவுகள் அனைத்தும் அனைத்துலக உறவுகள் என்பதற்குள் அடங்கும்.

நாடு கடந்த உறவுகள் என்பது அரசுகள் அல்லாத அலகுகள், அவை புலம் பெயர்ந்த மக்களாக இருந்தாலும் சரி, வர்த்தக நிறுவனங்களாக இருந்தாலும் சரி, சமய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, சமூக அரசியல் இயக்கங்களாக இருந்ததாலும் சரி, அரச சார்பற்ற அமைப்புக்களாக இருந்தாலும் சரி – அவை ஒரு தேச-அரசின் அல்லது நாட்டின் எல்லைகளைக் கடந்து, இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் இயங்கும் நிலையினைக் குறித்து நிற்கும்.

சில ஆய்வாளர்கள் ஜரோப்பிய ஒன்றியம் போன்ற அரசுகள் சேர்ந்து உருவாக்கியுள்ள எல்லைகள் கடந்த அரசியல் அமைப்புக்களையும் நாடு கடந்த உறவுநிலைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இக் கட்டுரைத் தொடர் அனைத்துலக உறவுகள் என்பதனை அரசுகளுக்கிடையிலானதாகவும் நாடு கடந்த உறவுகள் என்பதனை அரசுகள் அல்லாத ஏனைய அலகுகளுக்கிடையிலானதாகவுமே வரையறுக்க விரும்புகிறது.

இவ் வரையறை நாம் பேச வரும் விடயத்துக்கும் தேவையாக உள்ளது. இதேவேளை அரசாக அமையாத ஒரு தேசம் அரசுகளுடன் வைத்திருக்கும் உறவுகளை அனைத்துலக உறவுகள் என்ற வகைக்குள்ளேயே இக் கட்டுரை உள்ளடக்குகிறது. 

இவ்விடத்திலிருந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டினையும் தமிழர் தேசத்தின் அனைத்துலக உறவுகளையும் நாடு கடந்த உறவுகளையும் நோக்குவோம்.

அனைத்துலக உறவுகளைக் கையாள்வதற்கும் வென்றெடுப்பதற்கும் வெளியுறவுக் கொள்கை மிகவும் அடிப்படையானது.

ஆனால் வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு வகையான ஏனைய கொள்கைகளுடன் இணைந்தே கட்டப்படவேண்டியது.

தமிழர் தேசத்தின் அரசியற் தலைமையாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு இரட்டை மைய உலக ஒழுங்கு இருந்த காலத்தில் அமைப்பின் அரசியல் வேலைத்திட்டத்தை ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருந்தது.

அந்நூலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை நிலைப்பட்ட விடயங்கள் குறித்த ஒரு பார்வை வெளியாகியிருந்தது.

உலகம் இரட்டை மைய உலக ஒழுங்கில் இருந்து ஒற்றைமைய ஒழுங்கினுள் நுழைந்த பின்னர் இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கையினைப் பகிரங்கப்படுத்தும் வகையிலான ஆவணங்கள் எதுவும் தனியாக வெளியிடப்படவில்லை.

தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் கொள்கை விளக்க உரைகளிலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் சில பேட்டிகளிலும் வெளியுறவுக்கொள்கை தொடர்பாக சில அம்சங்கள் வெளியாகியிருந்தன.

இவை ஒற்றை உலகமைய உலக ஒழுங்கினைத் தமது கவனத்திற் கொண்டிருந்தன.

எனினும், போராட்டத்தின் புவிசார் அரசியல் காரணமாகவும், நிலவிய சர்வதேசச் சூழல் காரணமாகவும் உள்நாட்டில் இருந்த போர் அழுத்தம் காரணமாகவும் தமிழர் தேசத்தின்; வெளியுறவுகள் என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைச் சுற்றி அமைந்தளவுக்கு தமிழர் தேசத்திற்கான, தமிழர் தேசம் தனக்கென அமைக்க விழையும் தனி அரசுக்கான வெளியுறவுகளாக அமைந்து விடவில்லை.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் தமிழரின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் எனும் கருத்து நிலைக்கு கிடைத்த வெளியுலக உறவு ஆதரவுநிலை தமிழர் தமக்கெனத் தனிநாட்டை அமைப்பதற்குக் கிடைக்கவில்லை.

இருந்த போதும் 2002 ஆம் ஆண்டு தமிழர் தேசமும் விடுதலைப்புலிகள் இயக்கமும் எட்டியிருந்த நிலையை களத்தில் ஏற்பட்ட இராணுவ வலுச்சமநிலையை அரசியல் இராஜதந்திர அரங்கில் விடுதலைப்புலிகள் இயக்கம் நன்கு பயன்படுத்திக் கொண்டமையின் ஊடாகவே அடைய முடிந்தது.

இதற்கு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நிலைகொண்டிருந்து இவ் விடயங்களைக் கையாண்டதும் ஒரு காரணம்.

போர்ச்சூழலில், பாலசிங்கம் வன்னியில் தங்கியிருந்திருந்தால் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து உறவுகளைக் கட்டியெழுப்புவது கடினமாக இருந்திருக்கும்.

1999 ஆம் ஆண்டு சிறிலங்காப்படைகளின் ஜெயசிக்குறுப் படையெடுப்பை விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்றி கொள்கிறது. 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு முகாம் விடுதலைப்புலிகள் வசமாகிறது. யாழ்ப்பாணத்தை நோக்கிய புலிகளின் படையெடுப்பு சாவகச்சேரிவரை முன்னேறி, பின்னர் போதிய ஆட்பலமற்ற காரணத்தினால் பின்வாங்க வேண்டி ஏற்படுகிறது.

இக் காலப்பகுதியில், களத்தில் இராணுவ நடவடிக்கைகள் இடம் பெற்ற அதேவேளை நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையோன பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் ஆரம்பித்து விடுகின்றன.

இதற்கிடையில், 1980 களில் ஆரம்பித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களை மையப்படுத்திய நாடு கடந்த உறவுகளும் செயற்பாடுகளும் காலப்போக்கில் வளர்ச்சியடைந்து 1990 களின் இறுதிப்பகுதியில் ஒரு பலமிக்க நாடு கடந்த விடுதலை இயக்கமாகவும் (Transnational liberation movement) தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கிளைகள் பல நாடுகளில் அமைக்கப்பட்டு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவுடன் வலுப் பெற்று விடுகின்றன.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நாடு கடந்த உறவுகள் களத்தில் விடுதலைப்புலிகள் பலமடைய உறுதுணையாக இருக்கின்றன. களத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் அடைந்த வெற்றிகள் அதன் அனைத்துலக உறவுகள் வளர்வதற்கு உறுதுணையாக அமைகின்றன.

இங்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நாடு கடந்த உறவுகள் களத்தில் வெற்றிகளுக்குத் துணைபுரிய அவை புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கு வலுச் சேர்க்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்காக தீர்வினை எட்டுவதற்கு நோர்வேயின் ஈடுபாட்டை சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் உத்தியோகபூர்வமாகக் கோரிய பின்னர் நோர்வே இம் முயற்சியில் உத்தியோகபூர்வமாக ஈடுபடத் தொடங்குகிறது.

போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருதற்கான புரிந்துணர்வு உடன்பாடு தொடர்பாகவும் சிறிலங்கா அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் நோர்வே செயற்படத் தொடங்குகிறது.

இவை சந்திரிகா ஆட்சிக்காலத்தில், ஜனாதிபதியாக அவரும், அவரது கட்சியே அரசாங்கத்தையும் நடாத்தி வந்த காலத்திலேயே நடைபெறுகின்றன. இக் காலப் பகுதியிலேயே 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டிற்கான நகலும் தயார் செய்யப்படுகிறது.

இருந்தபோதும் தயார் செயயப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டு நகலில் சில விடயங்களில் சந்திரிகா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் அரசியல் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதிலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடிய பொருட்கள் தொடர்பாகவும் முரண்பாடுகள் ஏற்பட உடன்பாடு அவ் விடத்தில் மேலும் நகராது நின்று விடுகிறது.

இதன் பின்னர், ரணில் தலைமையில் ஜக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்த பின்னர், சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் போதே, ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டு, சிறிலங்காப் பிரதமர் ரணிலுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உடன்பாடு கைச்சாத்திடப்படுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் என்ற நோக்கு நிலையில் இருந்து பார்க்கும் போது இவ் உடன்பாடு முக்கியமான ஒரு மைல்கல்தான்.

இவ் உடன்பாடு சிறிலங்கா அரசையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பீட்டளவில் சமத்துவமானதாகக் கையாள்கிறது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற ஒரு பிரதேசம் உத்தியோகபூர்வமானதாகக் குறிக்கப்படுவதும் இவ் உடன்பாட்டில் முக்கியமான அம்சமாகும்.

விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தப்பட்ட ஒரு சூழலில், 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல் நடைபெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு என்பதிலும் அதன் முக்கியத்துவம் கவனத்துக்குரியது.

இருந்தபோதும், இது தழிழீழ விடுதலைப் போராட்டத்தை சமாதான வழியில் முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதப்போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவே அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் தமக்கெனத் தனியரசு ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான அனைத்துலக ஆதரவு இல்லாத ஒரு சூழலில், உலகில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை எதோ ஒரு வகையில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நிலையினை உலக நாடுகள் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் – இராணுவ அணுகுமுறையைக் கைக்கொள்ளுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் முயற்சியாக அனைத்துலக சமூகம் இதனை நோக்கியமையால் மிகுந்த ஆபத்தைக் கொண்டதாகவும் இம் முன்னெடுப்பு அமைகிறது.

இவ் உடன்பாட்டை எதிர்கொண்டு அரசியற்பாதையில் பயணிப்பதானால் மிக நீண்டதூரம் தனிஅரசு பற்றிப் பேசாமல் பயணிக்க வேண்டும்;.

இதற்கு சம்மதம் இன்றியோ அல்லது உருவாக்கப்படும் சூழலை எதிர் கொள்ளவோ  இராணுவப்பாதையில் காலடி வைத்தால் உலக நாடுகளின் கூட்டெதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டும்.

தமிழீழம் மிகக் கடினமான தெரிவுகளுக்குள் காலடி வைக்கிறது.

நெருடலாய் தொடரும்……

- நன்றி: பொங்குதமிழ்

முன்னைய பக்கங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.