கிறிஸ்மஸ் தீவிலிருந்த 150 ஈழத்தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியாவுக்கு மாற்றம்

கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் நிரம்பி வழிவதால் அங்கிருந்து 150 ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 700 படகு அகதிகள் அவுஸ்ரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 600 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும், 150 ஈழத்தமிழரையும் அவுஸ்ரேலியாவுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.

700 படகு அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து கேட்டின் விமானதளத்துக்கு- வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளனர்.
இந்த நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

மேற்கு அவுஸ்ரேலியாவின் பின்தங்கிய பகுதியாகிய கேட்டினில் ஆரம்பகட்டத்தில் 200 தொடக்கம் 300 வரையான அகதிகள் தங்கவைக்கப்படவுள்ளனர்.
தற்போது கிறிஸ்மஸ் தீவில் 2436 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஆகக் கூடுதலாக 2500 பேர் தங்குவதற்காக வசதிகளே உள்ளன. இந்தநிலையிலேயே ஒரு தொகுதி அகதிகளை அவுஸ்ரேலிய பிரதான நிலப்பரப்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களை அவுஸ்ரேலிய பிரதான நிலப்பரப்புக்கு மாற்றினால் அங்குள்ள தடுப்பு முகாம்கள் நிரம்பி விடும்.

சிறிலங்காவில் இருந்து வரும் அகதிகளின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மூன்று மாதங்களுக்கும், ஆப்கானிஸ்தான் அகதிகளின் விண்ணப்பங்களை 6 மாதங்களுக்கும் பரிசீலிப்பதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.