பிரபாகரனை இலங்கை அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது – கர்பால் சிங்

malasiyaவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் பிரபல சட்டத்தரணியுமான கர்பால் சிங் தெரிவித்துள்ளார். பினாங்கில் அண்மையில் இடம்பெற்ற ஈழத் தமிழர்களுக்கான நிதித் திரட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என கனவு காண்பதாகவும் பிரபாகரனை மகிந்த ராஜபக்ஷவால் அசைக்கக்கூட முடியாது எனவும் பிரபாகரன் ஓடிவிடமாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவார் எனவும் தமிழீழம் மலர்ந்தே தீரும் எனவும் கர்பால் சிங் கூறியுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவை பயங்கரவாதி என கூறிய உலகம் தற்போது அவரை தேசியவாதி என போற்றுகிறது. பிரபாகரனையும் நாளை சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போன்றுமே தவிர பயங்கரவாதி என ஒருபோதும் கூறாது எனவும் கர்பால்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளையும் இந்தியாவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் எங்கு போய்விட்டனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுக்காத இவர்கள் இவர்கள் இருவரும் உலக தமிழர்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடக்கும் இனவெறியாட்டத்தைக் கூட கண்டிக்க தயங்கும் இந்தியாவை நினைத்து தான் வேதனையடைவதாகவும் கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரசாரங்களை நம்பவேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம் அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.