ஸ்ராஸ்பூர்க் கவனயீர்ப்பு நிகழ்வில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளின் குழுத் தலைவர் பங்கேற்பு

starsbourg1205பிரான்சின் கிழக்குப் பாகத்திலிருக்கும் ஐரோப்பாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் 11.03.2009  புதன்கிழமை பி.பகல் 2.30 மணியிலிருந்து 5 மணிவரை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது. இந்தக் கவனயீர்பு நடவடிக்கையில் வன்னி மக்கள் மீதான சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்தும் உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப ஆவன செய்ய சர்வதேச சமூகம் அக்கறை எடுக்கவேண்டுமென கோரியும், பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் மக்களுக்கு அவசர உதவி வழங்கப்படவேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு நிகழ்வில் ஸ்ராஸ்பூர்க் வாழ் மக்களில் கணிசமான அளவிலான மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டும் தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டும் சிறிலங்கா ராணுவம் தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது, ஐரோப்பிய ஒன்றியமே! தமிழ் மக்களை அவர்களது சொந்த நிலத்தில் வாழ்வதற்கு உதவி செய்! சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு ஆவன செய்! உனது கண்களைத் திறந்துபார்! போன்ற உணர்வூட்டுகின்ற கண்டனப்பதாதைகளைக் கையில் தாங்கியவாறும், ஈழத் தமிழ் மக்களின் துயர்களைக் களையுங்கள் எனவும், சொந்த உறவுகளை நினைந்து மிக மிக வேதனையுடன் தமது கண்டனங்களை ஐரோப்பிய சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளிநாட்டு வெளிவிவகார ஆணைக்குழுவின் அங்கத்தவர் திருமதி. Marie Anne ISLER BÉGUIN அவர்கள் நேரடியாக சமூகம் தந்து உற்சாகம் தந்ததுடன், எம்மால் தாயாரித்து வைக்கப்பட்டிருந்த மனுக்களையும் பெற்றுக் கொண்டதுடன், தங்களினுடைய அரசியல் கட்சியான பச்சைக் கட்சி ஈழத்தமிழ் மக்களுக்களின் விடிவிற்காக தொடர்ந்தும் வாதாடிவருவதாகவும், நல்லதொரு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.அதே நேரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளின் குழுத் தலைவர் திரு. EVENS Robert அவர்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது திரு. EVENS Robert அவர்கள் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் இன்னல்களைத் தான் ஒவ்வொரு நாளும் அறிவதாகவும் அங்குள்ள நிலைமை மிக மோசமாகிக் கொண்டு செல்கிறது எனவும் தமிழ் மக்களுக்காக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் தான் எடுத்துவருவதாகவும் எமது துன்பங்களில் தானும் பங்கெடுத்துக் கொள்வதாகவும் கூறியதுடன், புதன்கிழமை இரவு (11.03.2009) ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இதன்போது சிறிலங்கா தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்திருந்ததுடன், முக்கியமாக சிறிலங்காவில் உடனடிப் போர்நிறுத்தம், காலதாமதமின்றி அமுலுக்குவரவேண்டும் என்ற வாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மக்களிடம் சென்று, இவ்வாறான கவனயீர்ப்பு நடவடிக்கைகைளை தொடர்ந்து செய்யுங்கள். அவ்வாறு செய்வதால் சர்வதேச அரச தரப்பினருக்கும், ஐரோப்பிய ஊடகங்களுக்கும் உண்மையான தகவல்களை, சாட்சியங்களுடன் எடுத்துச் சொல்வதற்கும், அறிய வைப்பதற்கும் இவ்வாறான கவனயீர்ப்பு நடவடிக்கைகள் உதவியாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.