என் அன்புக்குரிய புலம் பெயர்வாழ் தமிழீழ உறவுகளுக்கு: ஸ்ரீ லங்காவின் உளவுத்துறையினருக்கு நீங்கள் “பலி” ஆகாதீர்கள்

என் அன்புக்குரிய புலம் பெயர்வாழ் தமிழீழ உறவுகளுக்கு,  

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  உறுப்பினர்களுள்  ஒருவனாகிய  ஜெயசங்கர்  முருகையா (பிரித்தானியா) எனப்படும்  நான் உங்களுக்கு  உரிமையுடனும், நல்லெண்ணத்துடனும் விடுக்கின்ற ஒரு அன்பான   வேண்டுகோள்  இது.

நீங்கள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் செய்திகளிலிருந்து முக்கியமாக ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள் இன்று நான் நம்புகின்றேன். முன்னர், புலிகளின் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாளராக  புலிகளின் தலைவரினால் நியமிக்கப்பட்டு, பின்னர்  ஸ்ரீ லங்கா  அரசினால்  மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு,  தற்போது  ஸ்ரீ லங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் K.P. (கே. பத்மநாதன்) என்பவரைப்பற்றிய செய்திகள்தாம் அவை.  

K.P.’இற்கு ஆதரவாக ஒரு சிலரும், K.P.’இற்கு எதிராக இன்னும் ஒருசிலருமாக மக்களிடையே பிரச்சாரங்களை மேற்கொண்டு இருப்பதனை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். K.P.’இனது கடந்த காலத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் உண்மையில் ஒருவரிடமுமே இல்லை. ஸ்ரீ லங்கா கூறும் பேச்சுக்களை வைத்தே மாத்திரம் நாம் K.P.’யைப்பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து விட முடியாது. காரணம், ஸ்ரீ லங்காவினது புலனாய்வுத்துறை பல்வேறு கதைகளைக் கட்டிவிட்டு, புலம் பெயர்வாழ் எங்களிடையே “பிரிவினைவாதங்களையும்” மற்றும் “பிரச்சனைகளையும்” வளர்த்து, எங்களைக் “குழப்பியடித்து”, எங்களினால் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக – முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை “திசை திருப்பி விடுவது” மட்டுமல்லாமல், “வடக்கு கிழக்கு மீள்கட்டுமானப் பணிகளுக்கு” என்ற போர்வையில், எங்களிடமிருந்தே  “நிதிகளை” திரட்டி, ஈழத்தமிழர்களின் “இனஅடையாளத்தினை” பூண்டோடு அழித்து, ஈழத்தமிழர்களை “சிங்கள மயப்படுத்தி” ஒரு ஒன்று பட்ட “சிங்கள-புத்த தேசத்தினை” கட்டி எழுப்பும் முயற்ச்சியிலும் அது தீவிரமாக  இறங்கி உள்ளது. 

இந்த வேதனைகளும், சோதனைகளும் நிறைந்த காலகட்டத்தில், நாம் அனைவரும் மிகவும் தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும், சுயாதீனமாகவும் சிந்தித்து முடிவுகளை எடுக்க கடைமைப் பட்டிருக்கின்றோம். இந்த நிலைமையில் நான் உங்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்வது:-  

1) இதுவரை காலமும் உண்மையாகவே தேச விடுதலைக்காக போராடி, பின்னர் ஸ்ரீ லங்காவிடம்  சரணடைந்து அல்லது அவர்களிடம் பிடிபட்டு, சிறைச்சாலைகளில் அவர்களது சித்திரவதைகளையும், கொடுமைகளையும்  தாங்கிக்கொள்ள  முடியாமல்,  தற்போது ஸ்ரீ லங்காவினது புலனாய்வுத்துறையினரின்  “கைப்பொம்மைகளாகவும்”,  “வேவுகாரர்களாகவும்”  இருக்கும்  எங்களது முன்னைநாள் விடுதலைப் போராளிகள் பலரைப் போன்றதே, தற்போதைய K.P. எனப்படுபவரின் நிலைமையும் என்பதே உண்மை (இவரிடமுள்ள பணம் காரணமாக, இவர் ஸ்ரீ லங்காவின் சித்திரவதைகளிலிருந்து தப்பியுள்ளதாகத் தெரிகின்றது). K.P. என்பவர் தற்போது ஸ்ரீ லங்கா புலனாய்வுத்துறையினரின் மேற்பார்வையின் கீழ், அவர்களின்  “விருப்பு, வெறுப்புகளுக்கு  ” இணங்கி  செயல் படுபவர். இப்போதைய K.P. ஸ்ரீ லங்கா அரசின் ஒரு “ஏஜென்ட்”. இதனை நாம் அனைவரும் உணர்ந்து செயல் பட வேண்டும்.  

2) இன்றுவரையில், நீங்கள் அனைவரும் எவ்வளவோ சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியிலும், இரவு பகலாக வேலை செய்து, உழைத்து, எமது ஈழதேசத்தின் விடுதலைக்காக எவ்வளவோ தொகையான பணத்தை வாரி இறைத்தீர்கள். உங்களின் பணம் எங்கள் போராளிகளுக்கு எவ்வளவோ உதவியது என்பதும் உண்மை. ஆனாலும் கூட,  கடந்த வருடம் முள்ளிவாய்க்காளின்  நடந்து முடிந்த  துன்பகரமான  சம்பவங்களிற்கு பின்னரான இன்றைய நிலைமையானது மிகவும் மோசமானது என்பதனை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். நீங்கள் அனைவரும் தேசவிடுதலைக்காக கொடுத்துதவிய பணத்தின்  பெரும்பான்மையானவை இன்றும் கூட நம்மவர் சிலரினால் இங்கு “பதுக்கி” வைக்கப் பட்டுள்ளன. உங்களின் பணத்தில் இன்று “இவர்கள்” ஆடம்பர, சுக,போக வாழ்க்கைகளை நடத்தி வருவதனையும் நீங்கள் உங்களின் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். இன்று புலத்தில் மிகவும் துன்பங்களுக்கு மத்தியில் வாழும் எங்கள் மக்களுக்கு “உதவும்” எண்ணம் “இவர்களிடம்” சிறிதும் இல்லை.  “இவர்களை” நீங்கள் அனைவரும் இனம் கண்டு கொள்ள வேண்டும். 

3) கனடாவிலும், பிரித்தானியாவிலும், மற்றைய  நாடுகளிலும்  “பதுக்கப்”பட்டிருக்கும் “மக்களின்” பணம் முதலில்  வெளியில்  வரட்டும். புலத்தில் வாடிக்கொண்டிருக்கும் எங்கள் மக்களை  பதுக்கப்பட்டிருக்கும் “அந்த” பணம் முதலில் சென்றடையட்டும். அது வரையிலும், தயவு செய்து, நீங்கள் “இவர்களிடம்” மீண்டும், மீண்டும் ஏமாறாதீர்கள். தயவுசெய்து, எவருக்குமே “நிதி” கொடுக்காதீர்கள். தயவுசெய்து, ஸ்ரீ லங்கா அரசிற்கு “துணை” போகாதீர்கள். தயவுசெய்து, ஸ்ரீ லங்காவின் உளவுத்துறையினருக்கு நீங்கள் “பலி” ஆகாதீர்கள்.  

தயவுசெய்து,  புலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் உறவினர்கள் மூலமாகவோ அல்லது, உங்களுக்கு தெரிந்தவர்கள்  மூலமாகவோ, அல்லது நீங்கள் மிகவும் நம்பிக்கை  வைத்திருப்பவர்கள்  மூலமாகவோ மட்டுமே, நீங்கள்  அனைவரும் “புலத்தில் வாழும் எங்கள் தாயக  உறவுகளுக்கு”  உங்களால் முடிந்த அனைத்து  (பண)உதவிகளையும்  செய்யுங்கள், என்று நான் உங்கள் அனைவரையும்  உரிமையுடனும், அன்புடனும் வேண்டிக் கொள்கின்றேன்.   

நன்றி உறவுகளே.   

இவன்…
உண்மை அன்புடன்,
ஜெயசங்கர் முருகையா

ஜெயசங்கர் முருகையா அவர்களின் இந்த மடல் புலம்பெயர் தமிழீழத்திற்காக நெருடல் ஊடாக வெளியிடப்படுகின்றது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.