ஈழத்தமிழன் முதுகில் சுமக்கும் துரோகமும் அள்ளிவைப்புக்களும்

இலங்கையின் பொதுவான அழிவுக்கு அமைதியின்மைக்கு, இனப்பிரச்சினை முடிவில்லா யுத்தத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களும் அள்ளிவைப்புக்களும், தொடர்கதையாக இருந்துவருகிறது,

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதற்கு ஆதாரமாக, அகழ்வாய்வுகள் வரலற்றுச்சான்றுகள் எல்லாம் சாட்சிகளாக ஆதாரபூர்வமாக காணப்பட்டாலும், சுற்றிப்பரந்துள்ள உலக அரசியலின் யாப்புக்குள்,

அவரவர் வசதிக்கேற்ப ஈழத்தமிழனின்வரலாற்றை திரித்தும் உடைத்தும், தமிழினம் ஒன்றுமில்லாத பரதேசி சிறுபான்மை இனமாக, ஆயுள்குன்றிய ஒருவினோத உயிரினமாகவே கவனிக்கப்படுகிறது,

வங்காளத்திலிருந்து கடல்வழி விரட்டியடிக்கப்பட விஜயன், இலங்கையில் வந்திறங்கிய வரலாறும், அதற்குமுந்தியகாலத்தில் வடக்கே காங்கேயன்துறையிலிருந்து  தெற்கே காலிவரை, சிவவழிபாட்டுடன் தமிழை தாய்மொழியாகக்கொண்ட  நாகர் இனப்பூர்வகுடிகள் வாழ்ந்த வரலாறு ஆதாரபூர்வமாக, இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, போத்துக்கல், ஒல்லாந்து, ஆகியநாட்டு வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது,

இந்த உண்மை உலகம் முழுவதுக்கும் தெரிந்திருந்தாலும், தமிழருக்கென்று ஒருதனி அரசு இல்லாததாலும், சுயநலமில்லாத துணிவான அரசியலந்தஸ்துப்பெற்ற  தலைமைகள் இல்லாதகாரணத்தினாலும், தமிழினம் அழிவின்பால் சென்றுகொண்டிருக்கிறது, தமிழ்நாட்டில் வலுப்பெற்ற தமிழுக்கான அரசியலமைப்புக்கள் இருந்தாலும், சுயநல அரசியலுக்குள் வீழ்ந்துவிட்ட அவர்களால், “அள்ளிவைப்பது” தவிர நிமிர்ந்துநின்று திடமானமுடிவெடுக்க முடியாமல், தமிழனுக்கான அரசியல் நீர்த்துப்போன ஒன்றாகவே தொடர்ந்து இருந்துவருகிறது,

தொடர்ச்சியாக தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புக்களும் அள்ளிவைப்புக்களும் முதுகில்குத்தும் துரோகமும், தொடர்ந்து தமிழின அழிவுக்கு வீழ்ச்சிக்கு முக்கியகாரணமாக இருந்துவந்திருக்கிறது, அள்ளிவைப்புக்களையும் காட்டிக்கொடுப்புக்களையும் வெளியிலிருந்து எவரும் ஈடேற்றிவிடவில்லை, எல்லாம் உள்ளிருந்தே உளிவைக்கப்பட்டிருக்கிறது,

2009 மே மாதத்தின் பின் ஈழத்திலிருந்து எந்த ஒரு குரலும் வெளிவருவதில்லை, வெளிவரவும்முடியாது ஒவ்வொருவரையும் துப்பாக்கிகள் குறிவைத்த வண்ணமுள்ளன, துப்பாக்கிமுனையில் ஈழத்தில் வாய் அடைக்கப்பட்டுவிட்டது, இராணுவஅடக்குமுறை அங்கு காணப்பட்டாலும், காட்டிக்கொடுப்பவர்களின் அச்சுறுத்தலே தமிழனை அவலநிலைக்குத்தள்ளியிருக்கிறது, இந்தநிலை தமிழனுக்கெதிராக உலகம் முழுதும் பரவியிருந்தாலும், கைகட்டி கூனிக்குறுகி ஒன்றுக்கும் வழியில்லாமல் இருப்பதெல்லாம் ஈழத்திலுள்ள அப்பாவித்தமிழன் என்பதுதான் வருத்தத்திற்குரியது,

இந்தநிலையை உலகுக்கு தெரிவிக்கும்பணியை, புலம்பெயர் ஊடகங்களும் அமைப்புகளும் வெளிக்கொண்டுவந்தாலும்,  அவர்களை புலிகளென்ற முத்திரைகுத்தி ஏதாவதொரு சிக்கலில் மாட்டிவிடுவதற்கு, இலங்கை அரசும் ஒற்றர்களும் முழுநேரப்பணியாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர்,  நெருக்கடிக்கு மத்தியிலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பாதுகாப்பையும் பேச்சுச்சுதந்திரத்தையும் பயன்படுத்தி, ஈழத்தமிழனின் குரல் ஓரளவு உலகநாடுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது,

புலம்பெயர்தேசங்களில் எவ்வளவுதான் குரல்எழுந்தாலும், களத்தில் நல்ல ஒருதாக்கத்தை ஏற்படுத்தி, மக்களுக்கான சாதகமான அரசியலைப் பெறுவதற்கு களத்திலுள்ள அரசியல்க்குரலே இன்றியமையாமல் இருக்கமுடியும், அதுதான் நொடிந்துபோயுள்ள ஈழமக்களுக்கு பேருதவியாக அமையமுடியும்,

புலத்தில் பொதுநோக்கோடு எழும் எந்தக்குரலையும் புலிகளின்குரல் என்றே பிரச்சாரம் செய்யப்படுகிறது, புலத்தில் எழுங்குரல்கள் ஈழத்திலுள்ளதமிழர்கள் தனித்துவிடப்படவில்லை என்பதைக்காட்டி, அவர்களுக்கு மனத்தையிரியத்தைத்தந்தாலும், புலத்தமிழர்களினால் ஈழத்தின் அரசியலில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தமுடியாதென்பதே யதார்த்தம்,

சமீபத்தில் இலங்கை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது தமிழர் தேசியக்கூட்டமைப்பின் ப, உ, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு நீண்ட காரசாரமான உரையை நிகழ்த்தியிருந்தார், முற்றுமுழுதாக அரசாங்கத்தைக்கண்டித்து தமிழினம் ஓரங்கட்டப்படுவதை மிகயதார்த்தமாக துணிச்சலுடன் குற்றஞ்சாட்டியிருந்தார், அவரது பேச்சு உடனடிமாற்றமெதையும் கொண்டுவராவிட்டாலும், அந்தச்செய்தி உலகமட்டத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிங்கள அரசை சற்று சிந்திக்கவாவது வைத்திகுக்கும்,

ஈழத்தின் இன்றயநிலையில் அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு, தேசியக்கூட்டமைப்பைவிட குரல்கொடுக்க எவருமில்லை என்பதும் நிச்சியமான உண்மை, ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் சில விமர்சனங்கள் புலத்திலிருந்து தேசியக்கூட்டமைப்பின்மீது விழுந்ததும் உண்மைதான், உரிமையுடன் செய்யப்படும் அரசியலில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை என்றே எண்ணலாம்,

தமிழ்நாட்டிலிருந்து எழும்பும் நாடகத்தன்மையில்லாத, வஞ்சகமில்லாத சுயநலமற்ற அள்ளிவைக்காத குரல்களும்,ஈழ பிரச்சினையில் ஒரு மாற்றத்தைத்தோற்றுவிக்க உதவும், வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தலில் கூட்டுச்சேராத கட்சியெதுவும் ஆட்சியமைக்க முடியது,    இந்த உண்மை பலகாலமாக தொடர்கிறது, தற்போது ஆட்சியிலிருக்கும் தி மு க, காங்கிரசின் உதவியுடன் சிறுபான்மை அரசாகவே இருந்துவருகிறது,  இரண்டுமுறை அடுத்தடுத்து ஆட்சியிலிருந்ததால், கருணாநிதியின் ஊழல், குடும்பஅதிகாரம், மக்களின்போராட்டங்கள் கவனத்திலெடுக்காமை, நிச்சியம் ஒருமாற்றத்தை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும், தமிழ்நாட்டின் சிறுபான்மைக்கட்சிகள் ஈழப்பிரச்சினையையே தமது பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளுவார்கள் என்பதும்நிச்சியம், எனவே தமிழ்நாட்டின் பலகட்சிகளின் குரல் ஈழத்துக்கு சார்பாக ஒலிக்கும் அது தி.மு.க வையும் மத்திய அரசையும் கொஞ்சமேனும் கீழிறங்கச்செய்யும்,

தமிழ்நாடு அரசியல்க்கட்சிகளில் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, ஒருகட்டத்தில் தமிழ்ஈழத்தை முன்னிறுத்தியே உதயமாகியிருந்தது, ஆரம்பத்தில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன், முதற்கொண்டு ஈழத்தமிழர் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த ஒரு அரசியல்க்கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியாகும், 2009 முள்ளிவாய்க்கால் அழிகிறதென்று அறிந்தபோதும், செத்தவீட்டின் முற்றத்தில் சந்தற்பவாத அரசியலில்வீழ்ந்து தானும் சாதாரண சாக்கடை அரசியல்வாதி என்பதை திருமாவளவன் அள்ளிவைப்புஒன்றின் மூலம் நிரூபித்து நிதானமில்லாத பல நடைமுறைகளோடு தமிழர்மனங்களிலிருந்து வெளியேறியிருந்தார்,

 அதன்பின்னும் திருமாவளவன் தான் தொடர்ந்து ஈழ ஆதரவு நிலையில் இருப்பதுபோல் காட்டமுனைந்தாலும், முள்ளிவாய்க்கால் அட்டூழியத்தின் வலி, வேதனை, திருமாவளவனையும் ஞாபகப்படுத்துகிறதே தவிர அவரது ஆதரவை தமிழர் எவரும் ரசிக்கவில்லை,

நடைமுறை அப்படியிருந்தாலும் நான் எனது தனிப்பட்டகருத்தை முன்வைக்கிறேன், 2010 மே கோவையில் நடைபெற்ற கருணாநிதியின் செம்மொழி விழாவின் சிறப்புக்கருத்தரங்கில் பங்குபற்றிய திருமாவளவன், தன்பேச்சின்போது ஈழத்தமிழருக்கு ஆதரவு நிலையெடுத்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஈழத்தின் பலவரலாற்றுச்சான்றுகளை, கருணாநிதியின் முன்நிலையில் கடுமையானகுரலில் எடுத்துரைத்து வேண்டுகோள் ஒன்றின்மூலம், உடனடியாக தமிழர் நலன்காத்துதவுமாறு கேட்டுக்கொண்டார், அந்தப்பொது அரங்கில் அவர்விடுத்திருந்த வேண்டுகோள்மூலம் திருமா தான் செய்த தவறை உணர்ந்து தனது கறையை கழுவிக்கொள்ளத்துடிக்கிறாரா, அல்லது அள்ளிவைக்கும் கருணாநிதியுடனிருந்தாலும் தான் என்றைக்கும் ஈழத்தமிழர் ஆதரவாளன்தான் என்பதைக்காட்டிக்கொள்ளத்துடிக்கிறாரா, எதுவும் புரியவில்லை ஆனால் ஈழத்தமிழர்களது கனவு, நனவு, உயிர்மூச்சு,வாழ்வு, எல்லாம் அழியக்காரணமாகிவிட்ட காலங்கடந்த ஞானம் என்றே நான்நினைக்கிறேன்,

திருமாவளவனின் பேச்சில் எனக்கு இருகருத்திருந்தாலும், கருணாநிதி எப்பேர்ப்பட்ட அரசியல்வாதி என்பதில் கருத்து வேறுபாடு கடுகளவும் எனக்கில்லை, இந்தியா தன்னலன் காரணமாக ஈழத்தில் ஊடுருவுவதற்காக கருணாநிதிமூலம் தமிழர் நலன் நற்பணி என்று ஏதாவதொன்றிற்கு இடைச்செருகலாக கருணாநிதியை சொருகி காப்பாற்றமுனையக்கூடும், அதன் ஆயுத்தமாக திருமாவளவனின் பேச்சு இர்ருக்கலாமோ என்ற சந்தேகமுமில்லாமலில்லை,

அல்லது கருணாநிதி செம்மொழி விழாவில்க்கூறியதுபோல    இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இந்தவிடயம் மாநாட்டில் திரண்டுள்ள லட்சோப லட்சம் உலகத் தமிழர்களுக்கு வேதனையைத் தருகிறது என்றும் தெரிவித்தார்.

மாநாட்டில் கருணாநிதி தீர்மானங்களை முன்வைத்துப் பேசியவை வருமாறு:- இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல இயலாமல், இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்வாழ்வும், பாதுகாப்பும் உறுதியளிக்கப்பட்டு முழுமையான அளவுக்கு மறு குடியேற்றம் செய்யப்படவில்லை.

இலங்கைத் தமிழர்கள் (தமது மொழி இன உரிமையை நிலை நாட்டிக் கொள்வதற்கு நீண்ட நெடுங்காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு காணப்படாதமையும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதமையும், கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திரண்டுள்ள லட்சோப லட்சம் உலகத் தமிழர்களுக்கு வேதனையைத் தருகிறது. எனவே, இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், உடனடியாகத் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது).இவ்வாறு கருணாநிதி கூறினார்.       /”;2008 ஆண்டிலிருந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கருணாநிதியின் ஒப்பாரி அள்ளிவைப்பு தொடர்வதை கவனிக்கவும்”;/

அவர்குறிப்பிட்டவற்றில் அடைப்பு குறியீட்டுக்குள் காணப்படும் மேலேயுள்ள இரண்டுவிடையத்தையாவது நிறைவேற்றினாராக இருந்தால் திருமாவளவன் தி மு க, வுடன் அரசியல் செய்வதில் கொஞ்சமாவது பலனிருப்பதாகநம்பலாம், உடனடியாகஎன்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது  உடனடி என்பது இப்பொழுது இந்த நிமிடத்தைக்குறிக்கிறது,  நாம் ஒருமாதகாலத்தை பார்ப்போம்,   ஏதாவது நடந்தால்??????

கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றியதையே திருமா சமீபத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அலுவலகம் ஒன்றின் திறப்புவிழாவின்போது பெருத்த பெருமிதமாக தெரிவித்தார், தீர்மானம் போடுவது கருணாநிதிக்கு தற்காப்புக்கலை அவர் அதில் நிபுணர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும் நடைமுறைப்படுத்தப்பட்டால்த்தான் நம்பமுடியும்,    2009 ஏப் 24ம் திகதி இதே கருணாநிதி சாகும்வரை உண்ணாவிரதமென 2,1/2 மணி நேரங்கள் 2 A/C கூலர்களுடன் கடற்கரையில் காற்று வாங்கிவிட்டு சலிப்புத்தட்டியவுடன் மத்திய உள்த்துறை பசியிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்துவிட்டது யுத்தநிறுத்தம் ஐயகோ வெற்றி என ஏமாற்றி மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடியவர்தானே,

இப்படியான நம்பிக்கையீனங்கள் அள்ளிவைப்புகள் நிறையவே இருப்பதால் ஆர்வமிகுதியான அந்த சம்பவத்தை ஒருபொருட்டாக தமிழன் எடுத்துக்கொள்ளமாட்டான் என்பதே உண்மை,

தோல்விமேல் தோல்விகண்டு சட்டசபைத்தேர்தலை கருத்தில்க்கொண்டு ஜெயலலிதாவும் தன்பாட்டிற்கு பல அள்ளிவைப்புத்திட்டங்களை பதினெட்டு அம்சங்களுடன் அறிவித்திருக்கிறார், அத்துடன் கருணாநிதியை ஈழத்தின் போர்க்குற்றவாளியாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்,

ஜெயலலிதா கூறிய கூற்றின்படி கருணாநிதி தனது உண்ணாவிரதத்தால் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டுவிட்டதென்று பகிரங்கமாக 24.Ap 2009, அன்று அறிவித்ததால் அப்பாவி மக்கள் நம்பி வெளியேவந்தபோது குண்டடிபட்டு பல பத்தாயிரம்பேர் மரணமடையக்காரணமாகிவிட்டாது இதுவும் போர்க்குற்றிமாக கணிக்கப்படும், ஐநா நியமித்திருக்கும் விசாரணைக்குழுவில் கருணாநிதியையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று பரிந்துரைசெய்திருக்கிறார், அதுவும் நியாயமாகவே படுவதால் ஜெயலலிதாவை சாட்சியாளராக்கி கருணாநிதியை குற்றவாளியாக்கும் யோசனையில் பலர் இறங்கியிருப்பதாக தெரிகிறது முடிந்தவரை நாமும் இதுபற்றியதகவல்களை “மார்ஸுகி தருஸ்மான்” அவர்களுக்கு அனுப்பிவைப்போம், அள்ளிவைப்போரை சட்டத்தின் முன் நிறுத்துவோம்,

எல்லோருக்கும் அரசியல்செய்ய நல்ல களமாக இருக்கும் ஈழம், சிங்களவன் முதற்கொண்டு இந்திய அரசியல்வாதிகளுக்கும் சிக்கல் அவிழ்க்கப்படாத மர்மப்பிரதேசமாகவே இருக்கவேண்டுமென்பது முடிவான முடிவாயிருக்கிறது,

நெருடலுக்காக கனகதரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.