தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க எவருக்கும் அக்கறை இல்லை! – அரியநேத்திரன்

ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மூன்று தடவைகளாக்கும் வகையில் அரசியல் யாப்பைத் திருத்துவதிலேயே அரசும், ஏனைய கட்சிகளும் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் அக்கறை செலுத்துவனவாக இல்லை.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மூன்று தடவைகளாகவோ, முற்பது தடவைகளாகவோ மாற்றுங்கள். எங்களுக்கு அதில் ஆட்சேபனையில்லை. ஆனால் தமிழ் மக்களின் அறுபது வருடகால பிரச்சினையை தீர்க்க நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொடுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளை கருத்தில் எடுக்காமல் யுத்த வெற்றிக்கும், ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்துக்குமே முக்கியம் கொடுத்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் மட்டும் நாட்டில் பிரச்சினை ஒரு போதும் தீர்ந்து விடாது.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வைக் கொடுத்தால் மட்டுமே நாட்டில் நிரந்தரமான சமாதானம் மலரும். விவசாயத்தைப் பற்றி பேசப்பட்டது. ஆனால் விவசாயத்துக்கு கொடுத்த முக்கியத்தை விட பாதுகாப்பு நடவடிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் வருமானமும் கிடைத்தது. இதனால் கடந்த காலங்களில் வாகரைப் பிரதேசத்துக்குட்பட்ட கஜவத்தை கிராமத்தில் மர முந்திரிகைச் செய்கைக்காக 1500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு மரமுந்திரிகைச் செய்கை பண்ணப்பட்டது. பின் யுத்தம் காரணமாக இங்கு மரமுந்திரிகை செய்கை பண்ணப்படாமலிருந்தது.

தற்போது யுத்தமில்லாததால் அங்கு மரமுந்திரிகை செய்யக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதனால் இங்கு பொருளாதாரத்தை வளர்க்கலாம். ஆனால் மரமுந்திரிகை செய்யப்பட வேண்டிய காணியில் கடற்படை முகாம் அமைக்கப்படுகின்றது. பொருளாதாரத்தை விட பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மத விவகாரங்கள் பேசப்படுகின்றன. ஆனால் இந்து ஆலயங்களில் சென்று வழிபட சில ஆலயங்களில் இன்றும் சுதந்திரமற்ற நிலை காணப்படுகின்றது. உதாரணமாக மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் மலையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தாந்தாமலைப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைப்பதாயின் வேறு இடத்தில் அமைத்திருக்கலாம் .புனிதமான ஆலயத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இங்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இவ்வாலயத்தின் புனிதம் கெடுகின்றது. இங்கிருந்து இராணுவ முகாமை இடம் மாற்றவேண்டும். இதே வேளை மூடப்பட்டிருந்த கொக்கட்டிச் சோலை பிரதான வீதி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே போன்று பல வீதிகள் இன்னும் பல திறக்கப்படாமலுள்ளன. பொதுகட்டிடங்கள் பல இன்றும் இராணுவ முகாம்களாக பயன்படுத்தப் பட்டும் வருகின்றன. இவற்றிலிருந்தும் இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும்.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.