ஈழத்தமிழரை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்?

u3_indian_flag_4911631_stdவரலாற்றுக் காலம் தொடக்கம் இந்தியாவின் நேசசக்தியாக ஈழத் தமிழினம் இருந்து வந்துள்ளது. மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீண்ட ஒரு வரலாற்று உறவு இந்திய இலங்கை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்தியா சந்தித்த வெற்றிகளின் போதும் தோல்விகளின் போதும் இந்திய மக்கள் அனுபவித்த அதே மன உணர்வை ஈழம் வாழ் தமிழர்களும் வெளிப்படுத்தினர்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக எழுந்த இந்திய சீனப் போரின் போதும் இந்திய பாகிஸ்தான் யுத்தங்களின் போதும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பக்கமே நின்று குரல் கொடுத்தனர்.

ஆனால், இதற்கு மாறான உணர்வுலைகளையே சிங்கள தேசம் காலம் காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளது. இந்தியா வெளியிலிருந்து நெருக்கடிகளுகளைச் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இந்தியாவிற்கும் இந்திய நலனிற்கும் எதிரான பகைவர்களுக்கே சிங்கள அரசுகள் ஆதரவு வழங்கி வந்தன. இந்தியாவின் தேசிய நலனுக்கு விரோதமாகச் செயல்படுவதே சிறி லங்காவின் வெளிவிவகாரக் கொள்கையாகவும் இருந்தது. அந்தளவிற்கு பாரத தேசத்தை தனது பகை நாடாகவே சிறி லங்கா அரசியல் வரலாறு சித்தரிக்கின்றது. ஆனால், இந்த வரலாற்று உண்மையை புறம் தள்ளிவிட்டு நண்பனைப் பகைவனாகவும், விரோதியைத் தோழனாகவும் பார்க்கும் மாபெரும் வரலாற்றுத் தவறை இந்திய அரசு தொடர்ச்சியாகவே இழைக்கின்றது.

இந்த வகையில் தனது நட்புச் சக்தியான ஈழத் தமிழர்களை அழிக்க தனது பகைமைச் சக்தியான சிங்கள அரசிற்கு பல வகைகளிலும் துணை போகும் இந்திய அரசின் ஈனச் செயலை ஈழத் தமிழர்களால், உலகத்தின் மூலைகளில் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தளவில் அன்றிலிருந்து இன்று வரை ஈழத் தமிழர்களின் நலன்களிற்கு எதிராகவே இந்தியா செயல்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களின் தனியரசு போராட்டம் தொடர்பாக இந்தியாவிற்கு இருக்கும் சில அச்சங்களே அது எடுக்கும் இந்த நிலைப்பாட்டிற்கு காரணமாகும். இந்த நிலைக்கு தமிழகத்தையும் துணைக்கு அழைத்துச் செல்லும் ஒரு வரலாற்றுத் துரோகத்தையும் இந்தியா தொடர்ச்சியாக செய்து வருகின்றது.

இலங்கையின் இனப்போரைச் சாட்டாக வைத்து தனது தென்பகுதி வாசலில் பாரத நாட்டின் பகைச் சக்திகளான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாட்டுச் சக்திகள் தங்களது ஆதிக்கத்தைப் பலப்படுத்தி விடுமென்று இந்திய அரசு பயந்தது. தனது சொந்த பாதுகாப்பிற்கே அது ஆபத்தை விளைவித்து விடும் என்றும் இந்திய அரசு அஞ்சியது. எனினும் இந்த அச்சங்கள் பனிப்போர் முடிவுடன் தோன்றிய புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் நீடித்து நிலைக்க எதுவித காரணமும் இல்லை. ஒபாமாவிற்கு முன், ஒபாமாவிற்கு பின் என்கின்ற அடிப்படையில் உலக ஒழுங்கு தன்னை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, இலங்கைத் தீவில் எந்த சக்திகளின் கை ஓங்கினால் அது தனது பிராந்திய நலனுக்கு பங்கம் விளைவிக்கும் என்று கருதியதோ அந்தச் சக்திகளே இன்று இந்தியாவின் நட்பு நாடுகளாகவும் வர்த்தகப் பங்களாகளாகவும் மாறி விட்டன. எனவே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்திய அரசிற்கு இருந்ததொரு பழைய அச்சம் இன்று இல்லாமலேயே போய் விட்டது.

இதேவேளை, ஈழத்தில் தமிழர்கள் தனியரசு ஒன்றை அமைப்பது தனது தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்து விடும் என்ற ஒரு அச்சமும் இந்தியாவிற்கு உள்ளது. தமிழீழ திரு நாட்டின் உதயம் திராவிடக் கிளர்ச்சியைக் கிளறி தென்னிந்திய மாநிலமான தமிழகத்திலும் பிரிவினைப் புயலைப் பிறப்பித்து விடுமென்று இந்தியா அஞ்சுகின்றது. உண்மையில் இது அபத்தமான கருத்து என்ற அடிப்படையில் எழுந்ததொரு மிகைப்படுத்தப்பட்ட அச்சமே ஆகும். இதை நிலை நிறுத்தி தமிழக மக்களை உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு இந்தியா பாவிக்கும் ஒரே ஒரு அஸ்திரம் ராஜீவ் காந்தியின் படுகொலை.

ஒரு உயிர் உன்னதமானது. அந்த உயிர் அநியாயமாக இழக்கப்படுவது என்பது கண்டிக்கத் தக்கது என்ற தத்துவக் கோட்பாடு யதார்த்தமாயினும் அகில பாரதத்தின் சுதந்திரச் சிறகாகவும் அனைத்தலக தேசத்தின் சமாதானப் புறாவாகவும் இருந்த இந்திரா காந்தி அம்மையார் பாரதத்தின் ஒரு தேசிய இனத்தின் குறியீட்டுப் பொருளாக இருந்த மதத்துவ வாதிகளினால் கொல்லப்பட்ட போது அதை மௌனியாக இருந்து கல்லறைக்குள் புதைத்து அதை நியாயப்படுத்திய இந்திய தேசம், ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஓர் துன்பியல் சம்பவத்தின் காரணத்தை கருப் பொருளாக வைத்து கரைக்க முற்படுவது, அழிக்க முற்படுவது மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் என்றே ஈழத் தமிழினம் இந்தியாவிடம் எதிர்பார்க்கின்றது.

இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக ஈழத் தமிழர் நடாத்தும் தற்காப்புப் போராட்டம் இன அழிப்பு என்ற யதார்த்தத்தை எதிர் கொள்ளாத தமிழ்நாடு மாநிலத்தின் மக்களையும் போராடத் தூண்டும் என்ற இந்திய அரசின் பயம் அநாவசியமானது. எனினும், இந்த தேவையற்ற அச்சத்தின் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கு பாதகமான தீர்மானங்களை இது வரை இந்திய அரசு எடுத்து வருகின்றது.

இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ் இனம் இனப்படுகொலைக்கு உட்படுத்தப் படுகின்றது என்பது இந்திய அரசும் அதை வழிநடத்தும் கொள்கை வகுப்பாளர்களும் அறிந்திருக்கும் உண்மை. இந்த இன அழிப்பிலிருந்து தற்காத்து கொள்வதற்காக ஈழத் தமிழர்கள் நடாத்தும் விடுதலைப் போராட்டத்தை தனது தேசிய நலனுக்கு எதிரான செயலாக இந்தியா சித்தரிக்க முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இதை தமிழர்களின் பலவீனமாக கருதும் சர்வதேசமும் இந்தியாவை மீறி எதையும் செய்ய மாட்டோம் என்கின்ற ஒரு சூழலையும் உருவாக்கி உலக அரங்கில் தமிழர்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் சர்வதேச பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்கும் இந்தியா காரணமாக அமைந்துள்ளது வருந்தத்தக்க ஒன்றாகும்.

சிங்களப் பேரினவாதத்தின் தமிழ் இன அழிப்புக் கொள்கைக்கு இந்தியாவின் இந்த நிலைப்பாடு உற்சாகம் ஊட்டுவதாகவே உள்ளது. இதற்குச் சான்றாக ஒரு உதாரணம் எடுத்துரைத்தல் பொருத்தமானதாக இருக்கும். விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று இலங்கை கொடுத்த அழுத்தத்தை விட இந்தியா எடுத்துக் கொண்ட முயற்சிகளே அதிகம் என்பதை சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் சிலரின் கூற்றுக்கள் மூலம் உணர முடிந்தது.

இன்று என்றுமில்லாத அளவிற்கு இப்போது தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட யுத்தத்தை சிங்கள அரசு தீவிரப்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணத்தின் 5 இலட்சம் மக்கள் தனது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக அல்லலுற்ற போதும் அவர்களை கைவிட்ட இந்தியா வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் யுத்த நெருக்கடியும் இன அழிப்பு அபாயமும் தீவிரமடைந்துள்ள சூழலில் வன்னி பெருநிலப்பரப்பு மீதான சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பு உக்கிரமடைந்து நாளொன்றுக்கு 4 வயது குழந்தை முதல் 40 வயது தாய் உட்பட எண்பது வயது மூதாட்டி வரை நூறுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்படும் சம்பவம் நாளாந்த சூழலாக எழுந்துள்ள நிலையிலும் இந்தியா மௌனமாகவே இருக்கின்றது. சிறி லங்காவிற்கு உற்றதுணை புரிகின்றது. இது தவிர, கொழும்பு வாழ் தமிழர்களும் தென்னிலங்கை வாழ் தமிழர்களும் கூட மகிந்த அரசின் இனவாத கொள்கைகளாலும் அணுகுமுறைகளாலும் பெரும் துன்பத்தையே அனுபவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாகச் சொல்லப் போனால் ஒரு புறம் இனச் சுத்திகரிப்பு அபாயத்தையும் மறுபுறம் வேண்டப்படாத மக்களாகக் கணிக்கப்பட்டு துன்புறுத்தப்படும் அவலத்தையும் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளுகின்றனர். இத்தகைய இக்கட்டான வரலாற்றுச் சூழலிலேயே சிங்கள அரசிற்கு இந்திய அரசும் உதவி வருகின்றது. இதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்களை கோமாளிகள் என சிங்கள பேரினவாத தலைமைகள் கொச்சைப் படுத்துகின்ற போதும் அதற்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்கின்றதுவும் தமிழக தலைவர்கள் சிலரின் தனிப்பட்ட வாழ்வியல் பிரச்சினைகளை சமூக பிரச்சினைகளாக இந்திய அரசு கையிலெடுத்து அவர்களின் இன உணர்வை கொச்சைப் படுத்தியும் இந்தியா தனது மறைமுக தமிழின அழிப்புச் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழனின் பாதுகாப்புக் கவசமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பலத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபடும் அதேவேளை சிங்களப் படைகளின் பற்களையும் நகங்களையும் கூர்மையாக்குவதற்கு அதற்கு இராணுவ உதவிகளையும் வழங்குகின்றது. இது தமிழினப் படுகொலையை மேலும் அபாயகரமான கட்டத்திற்கு நகர்த்தவே உதவப் போகின்றது. அத்துடன் சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து இந்திய அரசும் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்கின்றது என்ற வரலாற்று அவப்பெயரையும் இந்தியா சம்பாதிக்கப் போகின்றது. சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வழிசெய்யாமல் தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் மேற்குலகம் முற்படுகையில் பூர்வீகத் தாயகத்தில் வாழும் ஒரு இனத்தை வேரறுக்கும் முயற்சியில் இந்தியாவும் ஏன் ஈடுபட வேண்டும் என்கின்ற கேள்வி ஒவ்வோர் தமிழ்மகனின் இதயத்துக்குள்ளும்
குமுறலாக எழுந்துள்ளது.

ஈழத் தமிழரின் அழிவு சிங்களப் பேரினவாதத்திற்கு பெரு வெற்றியாக அமையும் என்று வைத்துக் கொண்டாலும் அது இந்திய மக்களுக்கு இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக் கொடுக்க மாட்டாது. அதே போல இன்று நடக்கும் மிக மூர்க்கத் தனமான ஈழப்போரில் சிங்கள அரசு பெறும் வெற்றி இந்தியாவின் நலனுக்கு எந்தவகையிலும் உதவப் போவதில்லை. எனவே ஒரு பிரபாகரனின் தலை மட்டும் இந்திய அரசின் நலனைப் பூர்த்தி செய்யப் போவதில்லை.

எனவே, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா ஓர் புதிய அணுகுமுறையைப் பிரயோகிக்க வேண்டும். நவ காலனித்துவத்தின் முதன்மைச் சக்தியாக தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா கோலோச்ச வேண்டும் என்கின்ற எண்ணம் உண்மையின் தரிசனமாக இருக்கும் எனில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இந்தியா அங்கீகரித்து அவர்களை தனது அரவணைக்கும் சக்தியாக ஏற்றுக் கொண்டு பயணிப்பதே தென்னாசிய பிராந்தியத்துக்குள் ஒரு நல்லதோர் சூழலை இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஏனெனில், ஈழத் தமிழினத்தின் அபிலாசைகள் இந்திய உபகண்டத்தைச் சுற்றியுள்ள நாடுகளின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் நேர்மாறானவை. சத்திய வழியில் நின்று இலட்சியப் பயணத்தை மேற்கொள்ளும் ஈழத் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகள் என்பது காந்திய தத்துவத்தையும் கர்மவீரன் பகவத்சிங்கின் வழிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு பயணிப்பவை.

எனவே, இந்திய மக்களின் உண்மையான நட்புச்சக்தி ஈழத் தமிழர்கள் தான். ஆகவே ஈழத் தமிழினத்தின் நலன்களைப் பேணும் வகையில் இந்திய நடுவண் அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மனிதாபிமான அடிப்படை கொண்ட தமிழரின் விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமக்களும் ஈழத் தமிழனை தன் சொந்த சகோதரனாகப் பார்க்கும் உள்மனவெளி உருவாக்கத்தை ஏற்படுத்தும் மானிட தத்துவத்தை பாரதம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக நிற்கும் இந்திய அரசியல் களத்தில், வென்று ஆட்சியமைக்கப் போகும் கட்சி ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் மேற்குறித்த சாதக அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்பதே தமிழீழ மக்களினதும் உலகத் தமிழர்களிதும்; விருப்பமும் எதிர்பார்ப்பும் வேணவாவும் ஆகும். இந்தக் கோட்பாடு இந்திய தேசத்தை என்றும் எங்கள் தேசத்தின் விடுதலை சுமந்த ஆத்மாவில் விடி வெள்ளியாக ஆக்கும் என்ற நம்பிக்கையும் ஒவ்வொரு தமிழ்மகனின் உள்ளத்திலும் உருவாகி நிற்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.