அரசியல் காரணங்களுக்காகவே தமிழ் பிரதேச நீதிபதிகள் இடமாற்றம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

அரசியல்  காரணங்களுக்காகவும் அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்காகவும் சாவகச்சேரி மற்றும் வவுனியா நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரா இந்தக் கருத்தைத்  தெரிவித்திருக்கிறார்.

அரசுடன் சேர்ந்தியங்கும் அரசியல் கட்சியொன்றின் அழுத்தங்கள் காரணமாக நீதியாகவும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் நோக்கிலும் செயற்பட்டு வந்த இந்த நீதிபதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் நீதிச் சேவைக்கு ஏற்பட்ட பெருத்த தலைகுனிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல காலங்களுக்குப் பின்னர் வடக்கில் நீதிக் கட்டமைப்புகள் செயற்பட ஆர்மபித்துள்ள இந்த நிலையில் இது போன்ற செயற்பாடுகள் அந்த மக்கள் சட்டத்துறையின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.