பாதிக்கப்பட்ட இனங்களுக்கு இடையே உறவுகள் உருவாக்கப்படவேண்டும்! – மக்கள் பேரவை

பாரிஸ் புறநகர், கிளிச்சி தமிழ் சங்கத்தின்(Clichy Franco Tamil) ஏற்பாட்டில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் பாலஸ்தீனத்தில் இருந்த வந்திருந்த (Délégations) குழுவுடன் 05-07-2010 சந்திப்பினை மேற்கொண்டனர்.

இந்த முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு கிளிச்சி (Clichy) நகர பிதா திரு கில்லஸ் கட்டுவ (Monsieur Gilles Cattoire) தலைமை வகித்தார்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய  கிளிச்சி நகர பிதா  திரு கில்லஸ் கட்டுவ (Monsieur Gilles Cattoire) பேசும்போது, பாலஸ்தீனிய காசாவில் (Gaza) இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான, சகல விதமான சட்டத்துக்கு புறம்பான ஆயுதங்களை பாவித்து படுகொலைகளை செய்துகொண்டிருந்த  அதே நேரத்தில்,  இலங்கையில் சிறிலங்கா அரசு, இஸ்ரேல் ராணுவத்தை விட படுமோசமான இனப்படுகொலைகளை செய்துகொண்டு இருந்தது என சிறிலங்கா அரசு மீதான தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

பாலஸ்தீன குழுவின் (Délégations) தலைவர் திரு ஹனி அழ ஹேக்  (Monsieur Hani Al-Hayek) பேசும் போது, ஸ்ரீ லங்கா வில் நடந்த படுகொலைகள் உலக கண்களுக்கு மறைக்கப்பட்டு, செய்தியாளர்கள், அந்நிய நாட்டு அரசு, அரசு சார்பற்ற மனித நேய குழுக்களை  வெளியேற்றி விட்டு நடைபெற்றது என்றும், அதனால் அங்கே நடைபெற்றது எல்லோரினதும் பார்வைக்கு மறைக்கப்பட்டது என்றும், பாலஸ்தீன மக்களின் ஆதரவு இலங்கை தமிழ் மக்களுக்கு உண்டு என்றும் தாம் பாலஸ்தீனம் திருப்பி செல்லும் போது தம் தலைவர் திரு முஹம்மத் அப்பாஸ்வுடன் ( Monsieur Mohamed Abbas) பேசுவதாகவும் கூறினார்.

தமிழீழ மக்கள் பேரவையின் தலைவர் திரு. திருச்சோதி திருக்குலசிங்கம் பேசும் போது, எமது நிலையும் பாலஸ்தீன மக்களின் நிலையும், இரண்டும் ஒப்பிட்டு பார்க்க கூடியது என்றும், பாலஸ்தீன மக்கள் 1947 இல் தமது நாட்டை இழக்க துவங்கினார்கள் என்றும், தமிழர்கள் 1948யில் இருந்து தமது உரிமைகளை இழக்க துவங்கினார்கள் என்றும், காசாவில்(புயணய) நடைபெற்ற படுகொலைகள், மனித நேய கப்பலில் நடைபெற்ற அட்டுழியம் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் பாதிக்கப்பட்ட இனங்களுக்கு இடையே உறவுகள் உருவாக்கப்படவேண்டும் என்று கூறினார்.

பாலஸ்தீன மக்களது துயரங்களில் ஈழத் தமிழர்களாகிய நாமும் பங்கு கொள்கிறோம் என்றும், எம்மைப் போலவே தமது விடுதலைக்கான  போராட்டத்தைத் தொடரும் பாலஸ்தீன மக்களுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 தொடர்பு : 06 15 88 42 21 – தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.