அம்பாறையில் பகல்வேளையிலும் கொள்ளைச் சம்பவங்கள்

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மற்றும் மல்லிகைக்காடு ஆகிய பகுதியில் இனந்தெரியாத நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் குறித்து போலீசில் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளபோதும், எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஆயுதந்தாங்கிய குழுவினர் வெளிப்படையாகவே தமது வாகனங்களில் திரிகின்றனர் என்று முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரைஸ் கடந்த மாத அமர்வுகளில் தெரிவித்திருந்தார். இந்த ஆயுதக் குழுக்களே அப்பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், இவர்கள் மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அம்பாறை மாவட்டமானது சிறப்பு அதிரடிப் படையின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டமாகும். அவர்கள் 24 மணிநேரமும் அந்தப் பகுதிகளில் ரோந்துவரும் நிலையில், இக்கொள்ளைகள் அதிரடிப் படையினருக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்று முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடைகளில் கொள்ளைகள் நடந்துள்ள போதும் ஒரு சந்தேக நபர்களும் கைதாகாமல் இருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனைக்குடியிலுள்ள மருத்துவரின் வீடு, கல்முனை ஸாகிரா கல்லூரி அதிபரின் வீடு, பல்வேறு கடைகள், கையடக்கத் தொலைபேசிக் கடை, ஹாஜா மாக்காம் தெருவிலுள்ள ஆசிரியையின் வீடு, மல்லிகைக்காட்டிலுள்ள விவசாயிகள் வீடு என பல இடங்களில் கொள்ளைகள் நடந்துள்ளன. இங்கு களவாடப்படும் பொருட்கள் பக்கத்துக் கிராமங்களில் விற்கப்படுகின்றனவாம். பகல் வேளைகளிலும், இரவில் மின்சாரம் இல்லாத வேளைகளிலும் இக்கொள்ளைகள் நடந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.