ஐ.நா. அலுவலகம் மீதான முற்றுகை முட்டாள்தனமானது – ஹெல உறுமய

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான போராட்டங்கள் முட்டாள்தனமானவை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை அலுவலக நடவடிக்கைகளுக்கும், அதன் பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி ஜே.என்.பி.யினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் போராட்டத்தில் பல பௌத்த பிக்குகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பில் பல நாடுகள் அங்கம் வகிப்பதாகவும், நிபுணர்கள் குழுவினை நியமித்த பொறுப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரைச் சாரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனவே, நிபுணர்கள் குழு நியமித்தமை தொடர்பான பொறுப்பினை பான் கீ மூன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பு இதற்கு பொறுப்புச் சொல்ல முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
எமது வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிடுவதே நாகரீகமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டிய நாடு எனவும், வெளிநாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தும் போது இதனைக் கருத்திற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
சில துரோகிகள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலக நாடுகளை பிழையாக வழிநடத்தக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.