பிசுபிசுத்து போயுள்ள விமல் வீரவங்ஸவின் போராட்டம்! நள்ளிரவுக்கு பின்னர் ஓரிருவரே காணப்பட்டனர்!!

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ நேற்றுக் காலை ஆரம்பித்தார். எனினும்,  பிற்பகல்  பொலிஸார் அங்கு பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர். எனினும் நள்ளிரவிலும் மூன்று மேடைகளிலும் ஒரு சிலர் காணப்பட்டனர். 

விமல் வீரவன்ஸ தலைமையில் ஆயிரக் கணக்கானோர் பொலிஸ் பூங்கா மைதானத்தில் இருந்து ஐ.நா. அலுவலகத்தை நோக்கி நேற்று ஊர்வலமாக வந்தனர். ஐ.நா. அலுவலகம் முன்பு பொலிஸாரால் அமைக்கப்பட்டிருந்த தடைகளை உடைத்தெறிந்துவிட்டு ஐ.நா. அலுவலகம் முன்பாகக் கூடினர். பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்காது மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஐ.நா. அலுவலகத்தின் இரு வாயில்களையும் மறிக்கும் வகையில் மேடைகள் அமைக்கப்பட்டு சத்தியாக்கிரகமும் நடை பெற்றது.
இலங்கையின் யுத்தக்குற்றங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் நிபுணர் குழுவை அமைத்துள்ளதை எதிர்த்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இரு வாயில்களையும் மறிக்கும் வகையில் காலை தொடக்கம் சத்தியாக்கிரகம் நடைபெற்றதால் ஐ.நா. அலுவலகத்துக்குள் இருப்போர் வெளியே செல்ல முடியாத நிலைமையும்,  வெளியே உள்ளோர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டது.

அமைச்சர் விமல் வீரவன்ஸ சில தினங்களுக்கு முன்னர், ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கீமூன் நிபுணர் குழுவை வாபஸ் பெறாவிட்டால், கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும் எனவும், நிபுணர் குழு வாபஸ் பெறும்வரை இந்த முற்றுகைப் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்திருந்தார்.

இதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இது அரசின் நிலைப்பாடல்ல. அமைச்சர் விமல் வீரவன்ஸவின் சொந்தக் கருத்து எனத் தெரிவித்திருந்தார்

இந்த நிலையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ திடீரென நேற்றுக் காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் கொழும்பு பொலிஸ் பூங்கா மைதானத் திலிருந்து ஊர்வலமாக ஐ.நா. அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

நேற்று நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையானோர் மட்டும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மூன்று மேடைகளில் அமர்ந்திருந்தனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என்று விமல் வீரவன்ஸ நேற்றிரவு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.