அனைத்து நாடுகளிலும் உள்ள ஐ.நா அலுவலகங்களையும் முற்றுகையிடுவோம்! விமல் அறைகூவல்

இலங்கைக்கு எதிரான நிபுணர் குழுவை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலைக்கத் தவறினால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஐ.நா அலுவலகங்களின் முன்பாகவும் போராட்டம் நடத்துவோம்- எமது போராட்டம் உலகளாவிய ரீதியில் முடுக்கி விடப்படும் என்று வீடமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

அவர் ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீதான முற்றுகை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன மறுமொழிகளும் வருமாறு:

கேள்வி:-நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?

பதில்:-பான் கீ மூன் அவருடைய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவை அமைத்து விட்டார்.இலங்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு.ஒரு அங்கத்துவ நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் முதலில் அதன் பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் சபை ஆகியவற்றுக்கு அந்த யோசனையைச் சமர்ப்பித்து அவற்றின் அங்கீகாரத்தை முதலில்பெற வேண்டும் என்பது ஐ.நா நியதி. ஆனால் மூன் அப்படிச் செய்யவில்லை.

அவருக்கென ஆலோசனைக் குழு என்று என்று எதேச்சதிகாரமாக மூன் நியமிக்கின்றமைக்கு ஐ.நா சட்டத்தில் இடம் இல்லை. ஜனாதிபதி, இராணுவ உயரதிகாரிகள்,பயங்கரவாதத்தைத் தோற்கடித்த அரச படையினர் ஆகியோரை யுத்தக் குற்ற நீதிமன்றம் ஒன்றின் முன் நிறுத்தித் தண்டிக்கின்றமைக்காகவே இந்நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.இலங்கையை யுத்தக் குற்றம் என்கிற பெயரில் தண்டிக்க ஐ.நாவால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட நடவடிக்கையின் முதற்கட்டமே இது.

எமது நாட்டின் தேசப் பற்றாளர்கள் எவரும் இச்சதி நடவடிக்கையை அனுமதிக்கவே மாட்டார்கள்.இலங்கை பயங்கரவாதத்தை முறியடித்து விடாது என்றே பான் கீ மூன் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் நாம் பயங்கரவாதத்தை முறியடித்துக் காட்டி விட்டோம்.அதே போல இந்நிபுணர் குழுவை பான் கீ மூன் கலைக்கும் வரை ஐ.நாவுக்கு எதிரான எமது போராட்டத்தை நிறுத்தவே மாட்டோம்.நான் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் என்கிற வகையிலேயே இவற்றைக் கூறுகின்றேன். ஒரு அமைச்சராக அல்ல.

கேள்வி:- உங்கள் நடவடிக்கைகளால் அரசுக்கு பிரச்சனைகளால் ஏற்படாதா? உங்கள் முற்றுகை நடவடிக்கையை பயங்கரவாத செயற்பாட்டின் வடிவமாக வன்முறையின் உருவமாக ஏன் கருதக் கூடாது?

பதில்:-நான் அமைச்சராகவோ, அரசில் அங்கம் வகிக்கும் ஒருவராகவோ இல்லாவிட்டால் கூட இந்த முற்றுகை நடவடிக்கையைச் செய்துதான் இருப்பேன். ஏனெனில் நான் இந்நாட்டின் குடிமகன். எனது நாட்டை நேசிக்கின்றேன்.நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தலைவர்களையும், படையினரையும் காப்பாற்ற வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு.

இவர்கள் யுத்தக் குற்றங்களுக்காக சர்வேச நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்படுகின்றமையை அனுமதிக்கவே முடியாது.இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.எமது இப்போராட்டத்தில் மிகவும் கௌரவத்துக்குரிய புத்த பிக்குகளும் பங்கேற்கின்றார்கள்.ஆகவே இது பயங்கரவாத நடவடிக்கை அல்ல.அமெரிக்காவால் ஈராக்,ஆப்கானிஸ்தான் ஆகிய மீது தொடுக்கப்பட்டவை பயங்கரவாதத்துக்கு உதாரணங்கள் ஆகின்றன.

 கேள்வி:-இனி மேல் என்ன செய்வீர்கள்?

பதில்:-பான் கீ மூன் நிபுணர் குழுவை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்கின்றோம்.அவர் நிபுணர் குழுவை வாபஸ் பெறும் வரை ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் முன் எமது ஆர்ப்பாட்டமும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமும் தொடரும்.அவர் நிபுணர் குழுவைக் கலைக்கத் தவறினால் எமது போராட்டம் உக்கிரம் அடையும்.

கேள்வி:-அப்போதும் அவர் நிபுணர் குழுவைக் கலைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்:- நாம் மிகவும் கடுமையான வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டி இருக்கும்.ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஐ.நா அலுவலகங்கள் முன்பாகவும் போராட்டம் நடத்துவோம். உலகளாவிய இப்போராட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பங்குபற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.