சிதம்பரம், நிருபமா ராவ் ஆகியோருடன் கூட்டமைப்பு சந்திப்பு! இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து பேச்சு!!

இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரைச் சந்த்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் போருக்குப் பின்னரான வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இச் சந்திப்புக்களில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவையும் சந்தித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இச் சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவில் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கும் படி சிறிலங்கா அரசை இந்திய அரசு வலியுறுத்த மத்திய அரசை வற்புறுத்தும் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ராஜாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந் நிலையில், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டி.ராஜா எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.