பார்வதியம்மாளுக்கு நுழைவு அனுமதி வழங்க வேண்டும்! – மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறவிரும்பி எப்போது மனுச்செய்தாலும், அவருக்கு சட்டப்படி நுழைவு அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பார்வதி அம்மாள் விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று மத்திய அரசின் விளக்கத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை இன்று ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது.
இந் நிலையில், இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் வாதாடிய சட்டத்தரணி, பார்வதியம்மாள் அவமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது வாதத்தில் தெரிவிக்கையில், ‘இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்களான யாசர் அராபத், தலாய் லாமா, நெல்சன் மண்டேலா உட்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், எந்தக் குற்றமும செய்யாத விடுதலைக்காக பாடுபட்ட தனது மகனையும், கணவனையும் இழந்த பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற செயல். வேண்டுமென்றே நுழைவு அனுமதி கொடுத்து வரவழைத்து விட்டு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியது அவரை அவமதிப்பதாக உள்ளது.

எனவே, இதற்கு மத்திய அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது விமான செலவு உள்ளிட்ட பயண செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்’ என வாதாடினார்.

இந் நிலையில், இருதரப்பு வாதங்களையும் உன்னிப்பாக அவதானித்த நீதிபதிகள், பார்வதியம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறவிரும்பி எப்போது மனுச் செய்தாலும் அவருக்கு சட்டப்படி நுழைவு அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இத் தீர்ப்பை மத்திய அரசு சட்டத்தரணியும் ஏற்றுக் கொண்டதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பார்வதி அம்மாளின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.