அரசாங்க முழு ஆதரவுடனே ஐ.நா அலுவலகம் முற்றுகயிடப்பட்டது – ஆதாரம் இருப்பதாக மிரட்டும் கொழும்பு ஊடகங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு ஐ.நா அலுவலகம் முன் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக பான் கீ மூன் மூவரடங்கிய நிபுணர்கள் குழுவை நியமித்திருந்தார்.

இந் நிபுணர்கள் குழுவை கலைக்கும் படி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், சிறிலங்காவின் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

இந் நிலையில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் முழுமையான ஆதரவு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்த சிறிலங்காவின் பொலிஸ் அதிகாரி ஒருவரை கோத்தபாய ராஜபக்ச அச்சுறுத்தியதை ஊடகவியலாளர் ஒருவர் பதிவு செய்ததை அடுத்து இத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்காப் பொலிசார் மேற்கொண்டிருந்த போது விமல் வீரவன்ச அது குறித்து கோத்தபாய ராஜபக்சவுக்கு கைத்தொலைபேசியில் அறிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அகற்றுவதற்குரிய நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய பொலிஸ் அதிகாரியுடன் கைத்தொலைபேசியில் உரையாடிய கோத்தபாய ராஜபக்ச பொலிசாரை உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு உத்தரைவிட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபரே தமக்கு இவ்வுத்தரவை இட்டதாக கோத்தபாய ராஜபக்சவுக்கு குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி தெரிவிக்க, அவரை தான் பதவி நீக்கம் செய்கிறேன், நீங்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என கோத்தபாய ராஜபக்ச கட்டளையிட்டதாக அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தமது மேலதிகாரி இட்ட உத்தரவைக் கைவிட்டு பொலிசார் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாக முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரம் கிடைத்திருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.