மாங்குளம் முதல் முருகண்டி வரை இலங்கை இராணுவத்தினருக்காக 5 ஆயிரம் வீடுகள்; கொள்ளையிடப்படும் தமிழர் தாய் நிலங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுளளார். ஏ9 வீதியின் கிழக்கில் மாங்குளம் முதல் முருகண்டி வரையான பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினருக்காக 5 ஆயிரம் வீடுகளை அமைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. மீள்குடியேறிய மக்களுக்கு உதவி வழங்க தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி வழங்கமறுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேறிய மக்கள் உணவு மற்றும் குடி நீர் வசதிகளின்றி பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
அரசாங்கம் மக்களை மீள்குடியேற்றவில்லை. முகாம்களில் இருந்து மக்களை ட்ராக்களில் ஏற்றி அவர்களை எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடங்களில் தங்க வைத்துள்ளது. மீள்குடியேறிய மக்களுக்கு அரசாங்கம் எவ்விதமான நிவாரணங்களையும் வழங்கவில்லை.

80 வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீள்குடியேறியுள்ள பெண்களில் பெருபாலானவர்கள் தமது கணவன்மார்களை இழந்தவர்ளாக உள்ளதுடன் குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் கொல்லப்பட்டோ கைதுசெய்யப்பட்டோ உள்ளனர்.

மாங்குளம் பகுதியில் 12 ஆயிரம் இராணுவத்தினரின் குடும்பங்களை குடியேற்றவுள்ளதாகவும் அவர்களுக்காக முதல் கட்டமாக 5 ஆயிரம் வீடுகளை அமைக்க உள்ளதாகவும் அண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்த பௌத்த தேரர்களிடம் வட மாகாண கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சிங்கள குடும்பங்களுக்கு காணிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இருந்து ஆயிரகணக்கான தமிழ் மக்கள் வெளியேறியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக பல மில்லியன் ரூபாவை செலவிட்டு வருகிறது. இதனை தவிர சிங்கள குடியேற்றத்திற்காக மருதங்குளம் பகுதியில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.