யாழ்.சித்தங்கேணியில் ஆயுத முனையில் கொள்ளை!

யாழ். சித்தங்கேணியில் ஆயுதமுனையில் குடும்பத்தவர்களை அச்சுறுத்தி நகைகள், பணம், கைத்தொலைபேசி என்பவற்றைக் ஆயுதக் குழு ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் சித்தங்கேணியில் உள்ள வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு வாள், கத்தி, பொல்லுகள் சகிதம் உள் நுழைந்த குழு ஒன்று ஆசிரியரின் தந்தையான சிவபாதம் (வயது 65) என்பவரைப் பொல்லால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

அதன் பின்னர் ஆசிரியரையும் அவரின் மனைவி பிள்ளைகளையும் ஆயுத முனையில் மிரட்டிய கும்பல் 31 பவுண் நகை, சிறுதொகைப் பணம், கையடக்கத் தொலைபேசி, மிதிவண்டி என்பவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது.

குடும்பத்தினரை ஆயுதமுனையில் பிடித்து வைத்திருந்த கொள்ளையர் அலுமாரிகள், உடைகள் என்பவற்றையும் ஆராய்ந்த பின்பே சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கொக்ககோலா போத்தல், அலவாங்கு, ரெஸ்ரர் (மின் பரிசோதிக்கும் கருவி), பொல்லுகள் போன்ற தடயங்களை எடுத்துச் சென்றனர்.

கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த முதியவர் சங்கானை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைய காலமாக யாழ்.குடாநாட்டிலும் வன்னியிலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.