அரசாங்கத்தின் தூர நோக்கற்ற நடவடிக்கைகளே நிபுணர்கள் குழு நியமிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது – மங்கள சமரவீர

கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தூர நோக்கற்ற நடவடிக்கைகளே நிபுணர்கள் குழு நியமிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்ததென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு இன்று எதிர்நோக்கி வரும் சர்வதேச அழுத்தங்களுக்கு தற்போதைய ஆட்சியாளர்களே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைத் தலைமைக் காரியாலயம் முற்றுகையிடப்பட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நன்மதிப்பிற்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த காலங்களில் இலங்கை மீது சர்வதேச சமூகம் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச நீதிமன்றில் இலங்கையர்களை ஆஜர்படுத்தக் கூடிய சாத்தியத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.
 
2002ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றவாளிகளை ஆஜர்படுத்துவது தொடர்பான பிரகடனத்தில் அப்போது பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க கையொப்பமிடவில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டுபுற சண்டித்தனங்களை கைவிட்டு, சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் உறவுகளைப் பேணுவதற்கு முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.