கொழும்பில் தமிழ் மக்களைப் பதிவு செய்தல் கெடுபிடி மீண்டும் தொடங்கியது!

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மீண்டும் தங்களைப் பொலிஸில் பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முச்சக்கரவண்டி மற்றும் பொலிஸ் வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்திக் கொண்டு பொலிஸார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

மேலிடத்தின் பணிப்புரையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயம் பொலிஸில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டின் சகஜ நிலை காரணமாக வெளிநாட்டிலிருந்தும் பெருமளவிலானோர் வந்து விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், இவர்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை எனவும் கூறும் பொலிஸார் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வெள்ளவத்தைப் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களுக்கு மாத்திரமா அல்லது ஏனைய பகுதிகளுக்கும் பொருந்துமா? என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடியிடம் வினவியபோது,

மீண்டும் பொலிஸ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளதாகவும் கூறினார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த காலத்தில் இருந்து வந்த பொலிஸ் பதிவு முறைகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே வெள்ளவத்தைப் பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தில் இருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இதுவரையிலும் பொதுவான அறிவித்தலொன்றும் விடுக்கப்படவில்லை.

அத்தோடு வேறு எந்த பொலிஸ் பிரிவிலும் இவ்வாறு பொது மக்கள் மீண்டும் பொலிஸில் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.