ஐ.நா.விற்கு எதிரான போராட்டத்தினை தடுக்க முடியாது என்கிறது அரசு!

இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியல் கட்சி என்ற ரீதியில் தேசிய சுதந்திர முன்னணியின் ஜனநாயக உரிமையாகும். அதனை எம்மால் தடுக்க முடியாது.  என்று சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கட்சி என்ற ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இந்த நாட்டில் ஜனநாயக உரிமை காணப்படுகின்றது.

அதனை யாராலும் தடுக்க முடியாது. அவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தடுக்க அரசாங்கம் முயற்சிக்குமிடத்து அதனை சர்வாதிகாரம் என்று கூறிவிடுவார்கள்.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. அது ஜனநாயக உரிமையாகும்.ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கம் வலியுறுத்திக் கூறவேண்டும்.

அதாவது, ஐ.நா. அலுவலகம் முன்பான போராட்டத்துடன் எமது கட்சிக்கோ அரசாங்கத்திற்கோ ஒரு துளியும் சம்மந்தம் இல்லை என்பதை அரசாங்கம் சார்பில் வலியுறுத்திக் கூறுகின்றேன். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.