நிபுணர் குழுவை முளையிலேயே கிள்ள வேண்டும், இல்லையேல் அரச தலைவர்கள் தூக்கில் தொங்குவதைத் தடுக்க முடியாது; விமல் வீரவன்ச புலம்பல்!

ஐ.நா.வா? இலங்கையா? என்பதை நான் தீமானிக்கிறேன் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐ.நா அலுவலகம் முன் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இப் போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்குபற்ற வேண்டும். இதேபோன்று சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள ஐ.நா அலுவகலம் முன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் உள்ள புலி உறுப்பினர்களையும் அவர்களிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக் கொண்டு எம்மைத் தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கும் விரைவில் மக்கள் தண்டனை வழங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எந்த மொழியில் கூறினால் புரியும் என்பதை உணர்ந்து அவருக்கு புரிகின்ற மொழியில் எமது இராணுவம் பேசி அவருக்கு பாடம் புகட்டியுள்ளது. அதேபோன்று பான் கீ மூனுக்கும் புரிகின்ற மொழியில்தான் அவருடன் பேசவேண்டியுள்ளது.

இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகள் என்பதெல்லாம் ஐ.நாவுடன் சரிப்பட்டுவராது. இலங்கை தொடர்பிலான நிபுணர் குழுவை அமைப்பதாயின் ஐ.நாவின் பாதுகாப்பு சபையிலோ அல்லது மனித உரிமைகள் பேரவையிலோ அதனை விவாதத்திற்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.

இவ்வாறு செயற்பாடாது ஐ.நா. செயலாளர் நாயகமான பான் கீ மூன் தனதிஸ்டத்திற்கு இலங்கையின் உள் விவகாரங்களை ஆராய நிபுணர் குழு அமைத்தமை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. பான் கீ மூனுக்கு தனி தீர்மானங்களை எடுக்க உரிமை கிடையாது.

பிரபாகரனை பாதுகாக்க முடியாமல் போன சர்வதேசம் இலங்கை இராணுவத்தை ஐ.நா ஊடாக பழிவாங்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கடடம் தான் பான் கீ மூனின் நிபுணர் குழு.

இக் குழுவின் செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே அழித்துவிட வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் எமது தாய் நாட்டை மீட்டுத் தந்த வீரர்கள், அரச தலைவர்கள் ஆகியோரை சர்வதேசம் தூக்கிலிடுவதைத் தடுக்க முடியாது. மனச்சாட்சியுள்ள எந்தவொரு இலங்கையனும் பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு ஆதரவளிக்க மாட்டான்.

உள் நாட்டிலோ வெளிநாடுகளிலோ எவ்வகையான அழுத்தங்கள் வந்தாலும் நிபுணர் குழுவை ரத்து செய்யும் வரை எமது போராட்டம் தொடரும்.

எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு எம்மால் பொறுப்புக் கூற முடியாது. ஏனெனில் எமது தாய் நாட்டிற்கு முதலிடம் கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் நிபுணர் குழுவிற்கு உள்நாட்டில் சிலரது உதவிகள் கிடைக்கின்றன.

எனவே ஐ.நாவின் நிபுணர் குழுவிற்கு எதிரான எமது போராட்டத்திற்கு கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.