இலங்கைத் தமிழரைக் கடத்திய நால்வர் சென்னை பொலிஸாரால் கைது

இலங்கைத் தமிழர் ஒருவரை கடத்திய நான்குபேர் கொண்ட குழுவை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டனைத் தளமாகக் கொண்ட இலங்கைத் தமிழரான பி.சண்முகவேல் விடுமுறையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது கடந்த 22 ஆம் திகதி அவரை கடத்தியதாக இக்குழுவினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனா எனும் ஜனார்த்தனன் (30), கொளத்தூர் ஸ்ரீநிவாசன் (30), சுரேஷ் (29), பெரம்பூர் பாஸ்கர் (31) ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்களாவர் என டைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சண்முகவேல் என்பவரும் பாலா என்பவரும் இலங்கைத் தமிழர்கள் பிரித்தானிய விசா பெறுவதற்கு உதவும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக தலா 7 லட்சம் ரூபா பணம் அறிவிட்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அண்மையில் சண்முகவேலுடன் ஏற்பட்ட பிரச்சினையொன்றையடுத்து அவரை கடத்துவதற்கு பாலா தீர்மானித்ததாகவும் இதற்காக 9 லட்சம் ரூபாவை மேற்படி குழுவினருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இக்குழுவினர் சண்முகவேலை கடத்தி வீடொன்றில் வைத்துவிட்டு, அவரை விடுவிக்க வேண்டுமானால் 25 லட்சம் ரூபா தரவேண்டும் என சண்முகவேலின் மனைவி ராதிகாவிடம் தொலைபேசி மூலம் கோரினாராம்.

ராதிகா 17.5 லட்சம் கொடுத்ததையடுத்து சண்முகவேல் அண்ணாநகரில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சண்முகவேல் கொடுத்த புகாரின்பேரில் பொலிஸார் மேற்படி குழுவினரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாலாவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.